திருமணம் முடிந்த சில நாட்களிலே பேஸ்புக்கில் கெஞ்சிய தம்பதி : மகிழ்ச்சியாக வாழவேண்டும் என உருக்கம்!!

594

கேரளாவில் திருமணம் முடிந்த சில நாட்களிலே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தங்களை கொலை செய்துவிடாதீர்கள் என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த அட்டிங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸன் ஹாரிஸ்(20). கிறிஸ்தவரான இவரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா (19) என்ற முஸ்லிம் பெண்ணும் காதலித்து சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு மணமகன் ஹாரிஸ் வீட்டில் சம்மதம் தெரிவித்தபோதிலும், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவர்கள் எங்கள் மகள் சஹானாவை ஹாரிஸன் கடத்திச் சென்றுவிட்டார் என்று பொலிசில் புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி நேற்று முன் தினம் சமூக வலைத்தளமான பேஸ்புக் நேரலையில் பேசியுள்ளனர்.

அப்போது,நாங்கள் இருவரும் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால், எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரிடமிருந்து கொலை மிரட்டல் வருகிறது.

நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறோம். எங்களைக் கொலை செய்துவிட வேண்டாம் என்று அவர்கள் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இவர்கள் அட்டிங்கல் பொலிசில் பாதுகாப்பு கேட்டு தஞ்மடைந்துள்ளனர். பொலிசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக கேரளாவில் கவுரவக் கொலைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், கோட்டயம் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்த கெவின் என்ற இளைஞர், அவரது மனைவியின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.