கருணாநிதிக்கான சந்தனப் பேழை தயாரானது எப்படி?

310

திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான சந்தனப் பேழை 12 மணிநேரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 7ம் திகதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இதனை தொடர்ந்து கோபாலபுரம் வீடு, சிஐடி காலனியில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 8ம் திகதி காலை முதல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

பிரபலங்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அன்றைய தினம் மாலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு தயாரான சந்தன பேழையில், ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

சுமார் 75 கிலோ தேக்கு மரங்களைப் பயன்படுத்தி 12 மணிநேரத்தில் இந்த சந்தனப் பேழை செய்யப்பட்டுள்ளதாம்.

இதை உருவாக்கிய பிளையிங் ஸ்குவார்டு நிறுவன உரிமையாளர் கூறுகையில், 7ம் திகதி மாலை 6.30 மணியளவில் சந்தனப் பேழை தயாரிக்குமாறு கூறப்பட்டது.

இதனையடுத்து மூன்று மாதிரிகள் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்கப்பட்டு, ஒன்றை தெரிவு செய்து தந்தனர்.

உடனடியாக சுமார் 10 மணியளவில் 8 ஊழியர்கள் பணியை தொடங்கினர், 6 அடி நீளத்தில் 2.5 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டது.

சுமார் 75 கிலோ தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டன, உள்பகுதி முழுதும் உயர்ரக துணியால் அலங்கரிக்கப்பட்டது.

பேழையின் இருபுறமும் 6 தங்க முலாம் பூசிய கைப்பிடிகளும், நட்சத்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன, பணிகள் அனைத்தும் 8ம் திகதி காலை 10 மணிக்கு முடிந்தது என தெரிவித்துள்ளார்.