சமாதியில் கருணாநிதியின் படத்தைப் பார்த்து குதூகலித்த கொள்ளுப்பேரன் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

985

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு நேரத்தில் அவரை தினமும் சந்தித்து விளையாடி வந்த அவரது கொள்ளுப்பேரன், சமாதியில் கருணாநிதியின் படத்தைப்பார்த்து குதூகலித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

கருணாநிதி உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நேரத்தில் அவரது பேரன் அருள்நிதியின் 2 வயது மகன் மகிழன் தான் அவருக்கு பேச்சுத்துணையாக இருந்த உறவு.

ஒரு காலத்தில் 18 மணி நேரத்திற்கு மேலாக உழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. ஓய்வின்றி உழைத்த அவர் புத்தகம் வாசிப்பதையும், எழுத்துப்பணியையும் தனது வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டவர்.

தமிழக அரசியலில் கடந்த 2016-ம் ஆண்டு வரை முழுநேரமும் இயங்கக்கூடிய அரசியல் தலைவராகவும் விளங்கினார்.

ஓய்வுக்கு ஓய்வு கொடுப்பவர் என்று கட்சிக்காரர்களால் புகழப்பட்ட கருணாநிதியும் ஒரு கட்டத்தில் அறைக்குள் முடங்கிப்போனார்.

தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் பேசுவதற்கு சிக்கலை உருவாக்க, கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வந்த அவருக்கு உற்சாகத்தைத் தரும் மருந்தாக அப்போது விளங்கியது மகிழன்தான்.

கருணாநிதியிடம் மிகவும் ஒட்டுதலாக இருந்த பேரன் மகிழனுக்கு அவரது மரணம் கூட விளையாட்டுதான். நேற்று மாலை கருணாநிதியின் சமாதிக்கு வந்த அவரது குடும்பத்தார் பேரன் மகிழனையும் அழைத்து வந்திருந்தனர்.

சமாதியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கருணாநிதியின் படமும் வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அஞ்சலி செலுத்தியபோது அருள்நிதியின் தாயார் தனது பேரனை கீழே இறக்கிவிட்டார். தாத்தாவின் படத்தைப் பார்த்து உற்சாகமான மகிழன் கைகளை உயர்த்தி, குனிந்து தாத்தாவின் சமாதியில் குதூகலத்துடன் வணங்கினான். தாத்தாவின் படத்தைப் பார்த்து கைகளை உயர்த்தி அழைத்தான்.

தாத்தாவின் அந்திமக் காலத்தில் நெருக்கமாக இருந்த கடைக்கோடி உறவான கொள்ளுப்பேரன் மகிழனுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை, வளர்ந்து நினைவு தெரியும்போது அவர் நினைத்துப் பார்க்க வாய்ப்புள்ளதை எண்ணி குடும்பத்தினர் நெகிழ்ச்சி கொண்டனர்.