தம்பியை அடித்தே கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1037

ஒடிசா….

ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள சாலியா சாஹி நகரைச் சேர்ந்தவர் விஜய் போத்ரா. பள்ளி ஆசிரியரான இவருக்கு பிஸ்வமோகன் (25), ராஜ்மோகன் (21) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகனான பிஸ்வமோகன் எம்பிஏ படித்து முடித்துவிட்டு, வங்கித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தார். இளைய மகனான ராஜ்மோகன், மேற்படிப்பு படிப்பதற்காக புவனேஸ்வரில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இதனிடையே, ராஜ்மோகன் வீட்டைவிட்டு சென்று நண்பர்களுடன் தங்கியதில் இருந்து, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் அவர் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தார். அதுமட்டுமல்லாமல், தனது தந்தைக்கு அடிக்கடி ஃபோன் செய்து தனக்கு பணம் அனுப்பிவிடுமாறும் கூறி ராஜ்மோகன் தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்படி தராவிட்டால், வீட்டுக்கே சென்று தந்தையின் ஏடிஎம் கார்டை கொண்டு சென்று விடுவாராம்.

இதனால் தனது மூத்த மகன் பிஸ்வமோகனிடம், ராஜ்மோகனின் செயல்களை கூறி அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார் தந்தை விஜய் போத்ரா. இதையடுத்து, தனது தம்பி ராஜ்மோகனை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபோனில் தொடர்புகொண்ட பிஸ்வமோகன், “ஏன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறாய்” என அவர் கேட்டுள்ளார். மேலும், “இனி அப்பாவை தொந்தரவு செய்தால் நடப்பதே வேறு” என அவர் கூறியிருக்கிறார்.

ஆனாலும், தனது சேஷ்டைகளை ராஜ்மோகன் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து, தந்தையிடம் பணம் வாங்கிக் கொண்டும், கல்லூரிக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டும் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிஸ்வமோகன், நேற்று மதியம் தனது தம்பி ராஜ்மோகனுக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று இரவு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, ஏன் இப்படி போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறாய் என ராஜ்மோகனிடம் அண்ணன் பிஸ்வமோகன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில், வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து தம்பி ராஜ்மோகனை பிஸ்வமோகன் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து, பிஸ்வமோகனை கைது செய்தனர்.