கணவரின் முகத்தை பார்க்க 36 ஆண்டுகள் போராடிய மனைவி : 68 வயது முதியவராக திரும்பிய சம்பவம்!!

517

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது கணவரை எப்படியாவது மீண்டும் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மனைவிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த கஜானந்த் சர்மா என்பவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று தனது 32-வது வயதில் காணாமல் போனார்.

எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை. அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது.

விடுதலையானவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மாவை, அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர்.

வாழ்நாளில் ஒரு முறையாவது தனது கணவரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் காத்திருந்தேன் என மக்னி தேவி கூறியுள்ளார்.

நிச்சயம் அவர் திரும்பி வருவார் என கடந்த 36 ஆண்டுகளாக மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அவரை பிரிந்திருந்த காலங்கள் மிக கடினமானவை.

எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பினேன். அதனால் தான் எனது நம்பிக்கை நிறைவேறியது என கூறியுள்ளார். கஜனாந்தாவிற்கு தற்போது 68 வயதாகியுள்ளது.