19 வயதில் 3.7 கோடிக்கு சொந்த வீடு வாங்கிய இளம் பெண் : சுவாரஸ்ய தகவல்!!

1024

லண்டன்….

லண்டன் பகுதியை சேர்ந்தவர் Valentina Hadome. இவருக்கு தற்போது 19 வயதாகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது £400,000 மதிப்பில், (இந்திய மதிப்பில் சுமார் 3.7 கோடி ரூபாய்) சொந்த வீடு ஒன்றை வேலன்டினா வாங்கி உள்ளார்.

வெறும் 19 ஆவது வயதில் எப்படி இத்தனை மதிப்புள்ள வீட்டுக்கு சொந்தக்காரராக இளம் பெண் இருக்க முடியும் பலர் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது. இப்படி ஒரு இளம் வயதில், வீட்டை சொந்தமாக்க வேலன்டினா எடுத்துக் கொண்ட முயற்சி தான் பலரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது. தனது 13 வயதில் இருந்தே ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காமிக்ஸ் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்த வேலன்டினா, அதனை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் வேலன்டினாவுக்கு கிடைத்த ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து தனது தாயிடம் அவர் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் மூலம், 5,000 பவுண்டுகள் வரை வேலன்டினா சேமித்துள்ளார். பின்பு தனது 16 ஆவது வயதில், McDonalds நிறுவனத்திலும் பார்ட் டைமாக அவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இப்படி தனக்கு கிடைத்த பணத்தை எல்லாம் தொடர்ந்து சேமித்து வந்த வேலன்டினா, தனது சேமிப்பு தொகையில் இருந்து 22,000 பவுண்டுகளை வீடு வாங்குவதற்கான டெபாசிட் தொகையாகவும் அவர் கடந்த ஆண்டு செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, விடுமுறை செய்தும் பணம் ஈட்டி வந்த வேலண்டினா, சில நிறுவனங்களில் சிறிய அளவில் முதலீடு செய்தும் சேமிப்பை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, லண்டனின் அபே வுட் பகுதியில் இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டை சில அடமான விகிதங்கள் சலுகை முறையில், சொந்தமாக வாங்கியுள்ளார் வேலன்டினா. தனது சிறு வயதில் இருந்தே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பணத்தை சேமிக்க தாயார் சிறந்த வழியில் ஆலோசனைகள் கூறியதாகவும், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்ததாகவும் வேலன்டினா தெரிவித்துள்ளார். பலருக்கும் சொந்த வீடு என்பது கனவாக இருக்கும் நிலையில், சிறு வயதில் இருந்தே சிறுக சிறுக சேமித்தும், முதலீடு செய்தும் 19 வயதில் சொந்த வீடு வாங்கி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார் வேலண்டினா என்ற இந்த இளம்பெண்.