கோவை TO கேரளா… சைக்கிள்ல போய் தாலி கட்டிய மாப்பிள்ளை : அவர் சொன்ன காரணத்தை கேட்டு அசந்துபோன உறவினர்கள்!!

1257

கோவை…..

கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக சைக்கிளில் கேரளா சென்று பலரையும் திகைக்க வைத்திருக்கிறார். இதற்கு அவர் சொல்லிய காரணம் தான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிவசூர்யா. 28 வயதான இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அண்மையில் இவருக்கும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

அஞ்சனா அகமதாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வெர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமான நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து கேரள மாநிலம் குருவாயூரில் இருவரது திருமணத்தையும் நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டனர்.

இந்த திருமணத்திற்கு தனது வீட்டில் இருந்து சைக்கிளிலேயே கேரளா சென்றிருக்கிறார் சிவசூர்யா. தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கிளம்பிய இவர் மாலையில் திருமணம் நடைபெறும் குருவாயூர் சென்றடைந்திருக்கிறார்.

அதுமட்டும் அல்லாமல் திருமணம் முடிந்தும், மணப்பெண் அஞ்சனா மற்றும் குடும்பத்தினர் காரில் வர சிவசூர்யா தனது நண்பர்களுடன் சைக்கிளிலேயே கோவை திரும்பியிருக்கிறார். இது பலரையும் வியப்படைய செய்தாலும், இதற்கு அவர் சொல்லிய காரணம் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

சைக்கிள் பிரியரான சிவசூர்யா பசுமையான இந்தியா என்பதை வலியுறுத்தும் விதமாக தனது திருமணத்திற்கே சைக்கிளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். வழிநெடுகிலும் பொதுமக்களிடம் பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றிருக்கிறார் சிவசூர்யா.

தனது வீட்டில் இருந்து கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு 150 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்ற சிவசூர்யா, திருமணம் முடிந்த பிறகு சைக்கிளிலேயே வீடு திரும்பி இருக்கிறார்.

முன்னதாக குஜராத் மாநிலத்தின் சபர்மதியில் இருந்து கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரையிலான 1902 கிலோமீட்டர் தூரத்தை 10 நாட்களில் சைக்கிளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார் சிவசூர்யா. இந்நிலையில், தன்னுடைய திருமணத்திற்கு கோவையில் இருந்து கேரளாவுக்கு சைக்கிளில் சென்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் இந்த சைக்கிள் பிரியர்.