கத்தியை காட்டி மிரட்டி 100 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் : கேரள வெள்ளத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!!

744

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்ததால், அவர்கள் அனைவரையும் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, வீடுகள், கடைகள், விமானநிலையங்கள் என அனைத்திற்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வெள்ளத்தின் போது கூட, சிலர் தங்கள் வீடு மூழ்காது என்று நம்பி வீட்டின் உள்ளே நம்பிக்கையில் இருந்தனர்.

அவர்கள் வீட்டிலே இருந்தால், வெள்ள நீர் அதிகரித்து, உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், மீட்பு படையினர் அவர்களை எவ்வளவு வற்புறுத்தியும் வீட்டை விட்டு வெளியேற மனமில்லாமல் இருந்துள்ளனர்.

இதை அறிந்த கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டம் ரன்னி அருகே ஆயத்தலா பகுதியைச் சேர்ந்த பாபு நம்பூதிரி,எம்.கே. கோபகுமாரன் ஆகிய இரு இளைஞர்கள் அவர்களை கத்தி முனையில் மிரட்டி தங்களின் படகில் அழைத்து வந்து மீட்டுள்ளனர்.

இப்படி கிட்டத்தட்ட 100 பேரை அவர்கள் வெள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். அவர்கள் அப்படி மிரட்டி அழைத்து வரவில்லை என்றால் கண்டிப்பாக அந்த நூறு பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள்.

பாபு நம்பூதிரி திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகிறார். இந்த மீட்புப்பணிக்குப்பின், இப்போது பாபு நம்பூதிரியும், கோபகுமாரும், நிவாரண முகாம்களில் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இது குறித்து பாபு நம்பூதிரி கூறுகையில், வெள்ளத்தின் மூலம் என் உறவினர் ஒருவரை நான் பறிகொடுத்துவிட்டேன். இதேபோன்ற நிலை மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என நான் கருதினேன் அதனால் தான் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துவர்களைக் கத்தியை வைத்து மிரட்டினோம்.

நான் மிரட்டியதால் பலர் என் மீது கோபத்தில் இருந்தனர். ஆனால், அவர்களைக் காப்பாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நானும் என் நண்பனும் சேர்ந்து 100 பேரை காப்பாற்றியுள்ளோம் என்று பெருமையாக கூறியுள்ளார்.