வெள்ள பாதிப்பின் போது முதுகை படிக்கட்டாக்கிய நபருக்கு குவியும் பரிசுகள்!!

84

இந்திய மாநிலம் கேரளாவில் கடும் வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.

குறித்த நபரின் சேவையை பாராட்டி முன்னர் மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் கார் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.

கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் 14 மாவட்டங்களும் வெள்ளத்தால் மூழ்கியது.

மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிட மீட்புக்குழுவினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர்.

முக்கியமாக மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் வீட்டில் முடங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் கேரள மீனவர்கள் பெரும் உதவியாய் இருந்தனர். குறிப்பாக, வெள்ள பாதிப்பின் போது ஜெய்ஷால் என்ற மீனவர், தனது முதுகை படிக்கட்டாக்கிக் கொள்ள, பெண்கள் அவர் மீது ஏறி படகில் அமர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

ஜெய்ஷாலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் முதுகை படிக்கெட்டாக்கிய மீனவர் ஜெய்ஷாலுக்கு இஸ்லாமிய அமைப்பு புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது. தன்னுடைய வாழ்வில் தனக்கு சொந்த வீடு கிடைக்கும் என தான் ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை என ஜெய்ஷால் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.