தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – கடகம்

1743

ஆறாவது அறிவுக்கு அடிக்கடி வேலை தரும் நீங்கள், சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். இந்தாண்டு பிறக்கும் போது சூரியன் 6ம் இடத்திலும், புதன் 5ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

இந்த 2018ம் வருடம் முழுக்கவே சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 6ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றிப் பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். திடீர் பணவரவு, யோகமும் உண்டாகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் சஷ்டமபாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.

தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாயாருக்கு அசதி, சோர்வு, ரத்த அழுத்தம் வந்துச் செல்லும். வீடு பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். வீடு வாங்கும் முன் வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து க்ளீயரன்ஸ் சர்ட்டிபிகேட் வாங்கியப் பின் வீடு வாங்குவது நல்லது. இல்லையென்றால் வில்லங்கமான வீடுடோ அல்லது இடமோ வாங்கிவிட்டு பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக எந்த சொத்து வாங்கினாலும் மனைவி பெயரில் வாங்குவது நல்லது. ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்குள் நுழைவதால் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். அவருடனான மோதல்களும் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள்.

ஐ.வி.எப் போல அதிக செலவுள்ள சிகிச்சைக்குப் பின்பும் அம்மா என்று சொல்ல பிள்ளையில்லை என்று நீங்கள் அழாத நாளில்லை இனி அழகிய வாரிசு உருவாகும். வயசு ஏறிக் கொண்டே போகிறதே! ஒரு வரன் கூட அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் வருத்தப்படாத நாளே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும் படி திருமணத்தை முடிப்பீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

அவருக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கங்கள் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுடனான மனக்கசப்பு நீங்கும். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் 6ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். பணபலம் கூடும்.

10.03.2018 முதல் 02.05.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாயுடன் சனி சேர்வதால் மறைமுக எதிரிகளை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். முன்கோபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சல்கள் வந்து போகும். 01.01.2018 முதல் 13.1.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம்.

மனைவிவழி உறவினருடன் மனக்கசப்பு வரும். வாகன விபத்து வரக்கூடும். இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், 7ம் வீட்டிலேயே கேதுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். இரும்பு, நார், சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வந்து போகும்.

மனைவி வழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள். நீங்கள் யாரையும் மதிக்கவில்லை என்றெல்லாம் சிலர் குறைக் கூறுவார்கள். ஏமாற்றப்படபடுவோமோ என்று கலங்குவீர்கள். காலத்தை வீணடித்துவிட்டதாகவும் நினைப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது.

வியாபாரத்தில் நமக்குப் பின்னால் வந்து முதல் போட்டு ஏகப்பட்ட லாபம் எதிர்கடையில் உள்ளவர்கள் பார்த்து விட்டார்கள். பல வருடம் இங்கேயே இருந்தும் லாபத்தை பார்க்க முடியவில்லையேஎன்று நீங்கள் புலம்பி தவிர்த்தீர்களே! இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள்.

விளம்பர யுக்திகளை சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். பதிப்பகம், கன்ஸ்ட்க்சன், மூலிகை, ஸ்க்ராப் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். என்றாலும் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.

கன்னிப்பெண்களே! போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவ-மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத் திறன் வளரும். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்துவிடுங்கள். தேர்வறையில் விடையை நினைவுக்கூறும் போது திணறுவீர்கள். அதனால் விடைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது நல்லது. கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்றுக் கொள்வார்கள். என்றாலும் உட்கட்சி பூசல் வெடிக்கும். சகாக்களிடம் பெருமை பேச வேண்டாம்.

விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்க்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகைகளால் லாபமடைவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின் கற்பனை விரியும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். இந்த 2018ம் ஆண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை காட்டிக் கொடுப்பதுடன், நீண்ட கால கனவுகளையெல்லாம் நனவாக்குவதாகவும் அமையும்.

பரிகாரம்:வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்க பிள்ளையாரை தரிசியுங்கள். வயதானவர்களுக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.