தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – மகரம்

1675

அமைதியையும், அன்பையும் விரும்பும் நீங்கள், எல்லோரும் எல்லாம் பெற வேண்டுமென்று நினைப்பீர்கள். கவரிமானைப் போல கௌரவம் பார்க்கும் உங்களை பணத்தை காட்டி விலைக்கு வாங்க முடியாது. இந்த 2018ம் வருடம் சந்திரன் 5ம் வீட்டில் நிற்கும் போது பிறப்பதால் அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும்.

வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள்.இந்தாண்டு முழுக்க ராசிக்குள் கேதுவும், 7ல் ராகுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம், தலைச்சுற்றல், ஒற்றை தலை வலி, கை, கால் மரத்துப் போகுதல் வந்துச் செல்லும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் விரயாதிபதியும்  திருதியாதிபதியுமான குருபகவான் 10ம் வீட்டில் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும். இடைவிடாமல் உழைத்து கையில் எதுவும் தங்கவில்லையே என்ற ஏக்கம் வந்துப் போகும்.முன்கோபம், டென்ஷனால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க வேண்டி வரும்.

மற்றவர்களை குறைக் கூறுவதில் எந்த பலனும் இல்லை. சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. சின்ன சின்ன ஏமாற்றங்கள், எதிலும் ஈடுபாடற்ற நிலை வரும். அசிங்கப்பட்டுவிடுவோமோ, அவமானங்களை சந்திக்க நேரிடுமோ, யாரேனும் தன்னைப் பற்றி தவறாக சொல்லி விடுவார்களோ என்றெல்லாம் அடிக்கடி யோசித்துக் கொண்டேயிருப்பீர்கள்.

அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அவ்வப்போது ஆழ்மனதில் ஒருவித பயம் வந்து நீங்கும். மற்றவர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப் போய் பெயர் கெடும்.

ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 11ம் வீட்டில் சென்று அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.

பிரச்சனைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதனும்தனாதிபதியுமான சனிபகவான் 12ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும்.

தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து சில முடிவுகள் எடுக்கப்பாருங்கள். பழைய கடனைப் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டேயிருக்கும்.

1.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்வதால் இக்காலக்கட்டத்தில் அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். கடன் பிரச்னை அதிகரிக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்துச் செல்லும்.

தவறானவர்களை எல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள்.02.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் உணர்ச்சிவசப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்கள் செய்த துரோகங்களையெல்லாம் நினைத்து கவலைப்பட்டு நிம்மதியை இழந்து விடாதீர்கள்.

அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள். விளம்பரங்களை பார்த்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். அலர்ஜி வரக்கூடும். 16.05.2018 முதல் 10.06.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சை கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும்.

உத்யோகஸ்தர்களே! நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.

கன்னிப்பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களிடம் கொஞ்சம் தள்ளியிருங்கள். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளை கவனமாக எழுதுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள். பொழுது போக்குகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தவறான பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கணிதம், ஆங்கிலப் பாடங்களில் அதிக அக்கறை காட்டுங்கள்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். ஆனால் வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

அரசியல்வாதிகளே! சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள். தலைமையுடன் விவாதம் வேண்டாம். கௌரவப் பதவி உண்டு. சகாக்களை அடக்கி வாசிக்க சொல்லுங்கள்.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமுகமாக பேசி தீர்க்கப்பாருங்கள். எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். ஆகமொத்தம் இந்த 2018ம் ஆண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் தன் கையே தனக்குதவி என்பதை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:குற்றாலத்திற்கு அருகிலுள்ள இளஞ்சி முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழ்பவர்களுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுங்கள்.