சர்கார் படக் காட்சிகள் நீக்கம் : விளக்கமளித்த தயாரிப்பாளர்கள்!!

646

காட்சிகள் நீக்கம்

முறைப்படி தணிக்கை செய்து வெளியான சர்கார்’ படத்தின் சில காட்சிகளை நீக்கியது தொடர்பில் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர். மறுதணிக்கை செய்யப்பட்டு சில காட்சிகள் நீக்கப்பட்டு, படக்குழுவினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ‘சர்கார்’ சர்ச்சை தொடர்பாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர்.

அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கு, திரைப்படம் காண வரும் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.