என் மனைவியை அடிக்கிறாங்க.. குழந்தைகள் கதறி அழுகிறார்கள் : கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் விட்ட கணவன்!!

942

கண்ணீர் விட்ட கணவன்

தமிழகத்தில் வட்டி கேட்டு தன்னுடைய மனைவியை சித்ரவதை செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் கணவர் கண்ணீர் வடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சேலம் மாவட்டத்தின் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர், தான் வாங்கிய கடனை விட இரண்டு மடங்கு அதிமாக தொகை கொடுத்த போதும், இன்னும் வட்டி வேண்டும் என்று கேட்டு தன் மனைவியை அடித்து சித்ரவதை செய்வதாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு கவிதா என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். நான் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன், என் மனைவி பெட்டி கடை வைத்திருக்கிறாள்.

இந்நிலையில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு எங்கள் ஊரில் இருக்கும் சுப்ரமணி என்பவரிடம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். 3 வருடம் வட்டி மட்டும் 1,50,000 ரூபாய் கட்டினேன். அதன் பிறகு என் இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது.

இதன் காரணமாக ஒரு வருடம் வட்டிகட்ட முடியவில்லை. பிறகு வீட்டில் இருந்த பாத்திர, பண்டத்தை விற்று அசல் ஒரு லட்சம் ரூபாயை கட்டிவிட்டோம்.

ஒரு லட்சம் வாங்கியதற்கு பதிலாக 2.05 லட்சம் ரூபாய் கட்டிவிட்டேன். ஆனால் சுப்ரமணியோ 9-மாதம் காட்டாமல் இருந்த காரணத்தினால், அதற்கு வட்டி போட்டு, இன்னும் 1,20,000 கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்.

நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படுக்கை படுக்கையாக கிடக்கிறேன். என் மனைவி பெட்டிக்கடை வைத்துக்கொண்டு அதில் கிடைக்கிற சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

இந்த நிலையைக் கண்டு இரக்கம் இல்லாமல் என் மனைவியைப் போட்டு அடிக்கிறார்கள். குழந்தைகள் கதறி அழுகிறார்கள். நான் நல்லா இருந்தால் என் மனைவியை அடிக்கவிட மாட்டேன். கேட்பதற்கு யாரும் இல்லை என்பதால் சித்ரவதை செய்வதாக கண்ணீர்மல்க கூறினார்.