கஜா புயலால் மக்களுக்கு உதவும் நேரத்தில் இப்படி ஒரு விளம்பரம் தேவையா ரஜினி?

889

ரஜினி

தமிழகத்தில் கஜா புயலின் கோரதாண்டவத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினியின் ஸ்டிக்கரை ஓட்டியுள்ளது தற்போது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நேற்று முன் தினம் நள்ளிரவு கஜா புயலின் பாதிப்பு அதிகம் இருந்தது. அதிலும் குறிப்பாக, நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற பகுதியில் அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்ததால், அவர்கள் நடுத்தெருவில் சமைத்து சாப்பிட்டு வரும் நிலை உள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பேரிடர் மேலாண்மை குழுவினர் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு தொடர்ந்து முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றது. நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 461 முகாம்கள் போடப்பட்டுள்ளனர். அதில் 81,698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் மயிலாடு துறையில்புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கி வருகின்றனர். அப்போது அவர்கள் வழங்கிய உணவுப் பொருட்களில் ரஜினியின் ஸ்டிக்கர் இருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஒரு சில கட்சியினர் தாங்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களில் அந்த கட்சியின் ஸ்டிக்கரை ஒட்டி ஏற்கனவே விமர்சனத்தை சந்தித்துள்ளனர். தற்போது வருங்கால அரசியலில் முக்கிய அரசியல்கட்சியாக பார்க்கப்படும் ரஜினி கட்சினர் இப்படி செய்வது தற்போது ஊடகங்களில் விவாதமாக மாறியுள்ளது.