அவர்கள் நாசமாகப் போகட்டும்… அவள் தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறாள் : தீயில் கருகிய மாணவியின் தந்தை உருக்கம்!!

517

தந்தை உருக்கம்

2000ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் திகதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி, கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கியது அப்போது இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர்.

அதில் உச்சகட்ட வன்முறையாக தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவம் நடந்தது. தருமபுரி, பாரதிபுரம் எனும் இடத்தில அதிமுகவினர், அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். அதில் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா எனும் மூன்று மாணவிகள் பேருந்தினுள்ளே தீயில் கருகி உயிரிழந்தனர்.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் மது என்கிற ரவீந்திரன் மூன்று பேரும் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல், எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன் தமிழக அரசு ரகசியமாக விடுதலை செய்துள்ளது.

இவர்களின் விடுதலை குறித்து மரணமடைந்த விருத்தாசலம் பூவனூரைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவியின் தந்தை கூறியதாவது, உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றினார்களோ அன்றே நீதி தேவதை தன் தலையைக் குனிந்து வேதனையுடன் கண்ணீர் வடித்தாள்.

இன்னமும் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறாள். இந்த நிகழ்வுக்கும் நீதி தேவதை கண்ணீர் வடிப்பாள். அவர்கள் நாசமாகப் போகட்டும் வேறு என்ன சொல்வது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.