பிரபல தமிழ்ப்பட நடிகை ரியாமிகா தற்கொலைக்கு காரணம் என்ன : விசாரணையில் பரபரப்புத் தகவல்கள்!!

217

நடிகை ரியாமிகா தற்கொலை

சென்னையில் நடிகை ரியாமிகா தற்கொலை செய்த நிலையில் அவரின் இம்முடிவுக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்த நடிகை ரியாமிகா குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி ஆகிய 3 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நடத்தப்பட்ட பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின பொலிசார் கூறுகையில், ரியாமிகாவுடன் உறவினர் பிரகாஷும் உடன் தங்கியிருந்தார்.

ரியாமிகா, தினேஷ் என்பவரை காதலித்துவந்துள்ளார். இந்நிலையில், படவாய்ப்பே இல்லாததால் ரியாமிகா, சில மாதங்களாக மனவருத்தத்தில் இருந்துவந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு தினேஷுக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். நேரமாகிவிட்டதால் காலையில் வருகிறேன் என்று தினேஷ் கூறியுள்ளார். அதன்பிறகு பிரகாஷுக்கும் ரியாமிகாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, தன்னுடைய அறைக்கு ரியாமிகா சென்றுவிட்டார்.

காலையில் கண்விழித்த அவர் அறையிலிருந்து வெளியில் வந்துள்ளார். அதன்பிறகு மீண்டும் அறைக்குச் சென்று தூங்கிவிட்டார். அப்போது, தினேஷ் வீட்டுக்கு வந்துள்ளார். தினேஷும் பிரகாஷும் சமையல் செய்துள்ளனர். அதன்பிறகு சாப்பிடுவதற்காக ரியாமிகாவை எழுப்ப அறைக்குச் சென்ற போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது.

இதனால், பின்பக்க ஜன்னல் வழியாக அவர்கள் அறையை எட்டிப்பார்த்துள்ளனர். அப்போதுதான் ரியாமிகா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக நாங்கள் சென்று ரியாமிகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இது தொடர்பாக பிரகாஷ், தினேஷ் ஆகியோரிடம் விசாரித்தபோது சில மாதங்களாக படவாய்ப்பு இல்லாமல் அவர் மனவேதனையில் இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும், ரியாமிகாவின் அறையை சோதனை செய்தபோது அங்கு குறிப்பிடும் வகையில் எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. இதனால் அவரின் செல்போனில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துவருகிறோம். இதற்கிடையில் ரியாமிகாவின் தம்பி பிரகாஷுக்கும் நிரந்தர வேலை இல்லை.

இதனால் ரியாமிகாவின் தற்கொலைக்கு பொருளாதார நெருக்கடியே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறோம். மேலும், தற்கொலைக்கு முன் தினேஷ், ரியாமிகாவிடம் சரியாகப் பேசவில்லை. அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம். அதோடு தம்பி பிரகாஷும் ரியாமிகாவுடன் தகராறு செய்துள்ளார்.

இந்த மூன்று காரணங்களுக்காக நடிகை ரியாமிகா தற்கொலை செய்துகொண்டாரா என்று விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர். ரியாமிகா குறித்து விசாரித்தபோது அவரின் சொந்த ஊர் ஈரோடு. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் பெற்றோர் இறந்துவிட்டனர்.

இன்ஜினீயரிங் முடித்த நடிகை ரியாமிகாவுக்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து பெயரும் புகழும் பெற வேண்டும் என்று சிறுவயதுமுதல் ஆசை. இதனால்தான் அவர் சினிமாவுக்குள் நுழைந்து கதாநாயகியாக நடித்தார். இதற்கிடையில், ரியாமிகா தற்கொலை தொடர்பாக அவர் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.