சண்டைபோட்டு புத்தாடை வாங்கினாள் : நானே என் மகளை கொன்றுவிட்டேனே : கதறி அழும் தந்தை!!

955

கதறி அழும் தந்தை

கர்நாடக மாநிலத்தை உலுக்கியுள்ள கோயில் பிரசாதத்தால் பக்தர்கள் பலியான சம்பவத்தில், தந்தை ஒருவர் தனது 12 வயது மகளுக்கு தன் கையாலேயே பிரசாதம் கொடுத்து கொன்றுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 14 பக்தர்கள் மரணமடைந்த சம்பவம், அம்மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் 14ஆம் திகதி சாம்ராஜ் நகரில் உள்ள கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை உட்கொண்ட பலரும் வயிற்றை பிடித்தவாறு அங்கேயே மயங்கி விழுந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக மரணமடைந்தனர். இவ்வாறாக இதுவரை 14 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்களில் அனிதா என்ற 12 வயது சிறுமியின் தந்தை புட்டசாமி, தனது கையாலேயே பிரசாதத்தை மகளுக்கு கொடுத்ததை நினைத்து கதறி அழுதார். புட்டசாமியின் மனைவி சாந்தா இதுகுறித்து கூறுகையில், எனது கணவரிடம் சண்டையிட்டு புத்தாடை வாங்கிக் கொண்ட அனிதா, மகிழ்ச்சியாக கோயிலுக்கு சென்றாள்.

என் கணவர் புட்டசாமியும் கோயிலின் ஏற்பாடு பணிகளை கவனிக்க அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் 14ஆம் திகதி மதியம் 1 மணியளவில் கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பதாக செய்தி பரவியது.

உடனே கோயிலுக்கு ஓடோடி சென்று பார்த்தேன். அங்கே என் மகளை தூக்கி வைத்துக் கொண்டு கதறியடி என் கணவர் இருந்தார். என் மகள் சுயநினைவின்றி காணப்பட்டாள். சிறிது நேரத்தில் என் கணவரும் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் உடல்நலம் தேறிய புட்டசாமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் தனது மகள் குறித்து அவர் கூறும்போது, ‘நான் தான் என் மகளுக்கு பிரசாத்தை ஊட்டினேன். இப்போது என் கையால் சாப்பிட்ட உணவாலே என் மகள் இறந்துவிட்டாளே.. நானே என் மகளை கொலை செய்துவிட்டேனே. அவளுக்கு கொடுக்கும் முன்பு நான் தானே சாப்பிட்டிருக்க வேண்டும்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பொலிசார், முதற்கட்டமாக பிரசாதத்தை சமைத்த சமையல்காரர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதி, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.