மேஷம் முதல் மீனம் வரை.. சித்திரைமாத ராசிபலன்கள்!!

268

மேஷம்: சித்திரை மாதத்தின் துவக்கமே வெகு சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஜென்ம ராசியில் சூரியன் உச்சம் பெறுவதால் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். செய்யும் செயல்களில் வேகத்தோடு விவேகமும் வெளிப்படும். ஒரு சில காரியங்களில் வெற்றி பெற குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கும். மே 3ம் தேதி வரை சற்று நிதானிக்கும் நீங்கள் அதன்பின் முழு வேகத்துடன் செயலில் இறங்குவீர்கள். ஏப்ரல் 21ம் தேதி முதல் குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழ்நிலை நிலவத் தொடங்கும். ஆடம்பர செலவுகள் கூடும்.

பொன் ஆபரணங்கள், வெள்ளி பாத்திரங்கள் சேரும். புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு வெற்றி கிட்டும். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனைத் தரும் வகையில் அமையும். புதிய நண்பர்களின் சேர்க்கை உங்கள் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்யும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.

அவர்களின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. உடல் உஷ்ண உபாதைக்கு உள்ளாகும். ஒரு சிலருக்கு முகத்தினில் அதாவது கண், காது, மூக்கு, பல் போன்ற பகுதிகளில் பிரச்னைகள் தோன்றக்கூடும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் வெற்றி பெறும். தொழில்முறையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கலைத்துறையினர் எதிர்பார்த்த பொருளுதவி வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் ஏப்ரல் 30ம் தேதி முதல் உயர்வு காண்பர். நினைத்ததை சாதித்துக்காட்டும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: மே 1, 2, 3 பரிகாரம்: அக்னி நட்சத்திர நாட்களில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து உதவுங்கள்.

ரிஷபம்:ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதத்தின் துவக்கத்தில் 12ல் அமர்வதால் சற்று சிரமம் காண்பீர்கள். ஏப்ரல் 21ம் தேதி முதல் ஜென்ம ராசியில் அவர் ஆட்சி பலத்துடன் வந்து அமர்வதால் உங்கள் பணிகள் எளிதாக நடந்தேறக் காண்பீர்கள். அதே நேரத்தில் நினைத்ததை சாதிக்க அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். மே மாதம் 3ம் தேதி வரை சாமர்த்தியமாக செயல்பட்டு காரியத்தில் வெற்றி காண்பீர்கள். ராசிநாதன் சுக்கிரனின் ஆட்சி பலமும், தனாதிபதியின் லாப ஸ்தான சஞ்சாரமும் சிறப்பான பொருள் வரவினைக் காட்டுகிறது. ஏதேனும் ஒரு வகையில் உண்டாகும் பொருள் வரவினால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கௌரவ செலவுகள் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும்.

மே மாதத்தின் முதல் வாரத்தில் குடும்பத்திற்குத் தேவையான ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்க முற்படுவீர்கள். உடன்பிறந்தோரால் அனுகூலம் உண்டாகும். வண்டி, வாகனங்களால் செலவினங்கள் அதிகரிக்கலாம். சித்திரை மாதத்தின் இறுதியில் எதிர்பாராத பிரயாணத்தினை சந்திக்க நேரிடும். உறவினர்களோடு வீண் கருத்து வேறுபாடு தோன்றும். பிடிவாத குணத்தின் காரணமாக ஒரு சில விஷயங்களில் இழப்பினையும், ஒரு சில விவகாரங்களில் வெற்றியையும் காண்பீர்கள். புதிய நண்பர்களிடம் கவனத்துடன் பழக வேண்டியது அவசியம்.

கேளிக்கை, கொண்டாட்டங்கள், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை மனம் நாடும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கும். பிள்ளைகளின் செயல்களில் ஒருவித மந்தத்தன்மை நிலவி வருவதாக உணர்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குப் பக்கபலமாய் துணை நிற்பார். தொழில்முறையில் உங்கள் செயல்திட்டங்கள் சிறப்பான வெற்றியைக் கண்டு வரும். கலைத்துறையினரின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும். மனமகிழ்ச்சி காணும் மாதமாக அமையும்.சந்திராஷ்டம நாட்கள்: மே 4, 5.பரிகாரம்: அக்ஷய திருதியை நாளில் அன்னதானம் செய்யுங்கள்.

மிதுனம்:ராசிநாதனின் ஜீவன ஸ்தான சஞ்சாரம் தொடர்வதால் சிறப்பான உழைப்பினை வெளிப்படுத்தி வெற்றி கண்டு வருவீர்கள். ஏப்ரல் 20ம் தேதி வரை சிறப்பான தனலாபமும் வந்து சேரும். விடா முயற்சியும், கடுமையான உழைப்பும் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாய் அமையும். ஏப்ரல் 21ம் தேதி முதல் செலவுகள் கூடினாலும் செயல்வெற்றி என்பது சாத்தியமாகும். நம்பியிருந்த நபர் ஒருவரின் மூலம் ஏமாற்றத்தினை சந்திக்க நேரும் என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஜென்ம ராசியின் மீது பார்வையை செலுத்தும் குரு பகவான் உங்களை நிதானித்துச் செயல்பட வைப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை தக்கவைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவீர்கள்.

அதிகப்படியான செலவுகளின் காரணமாக பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடலாம். கடன்பிரச்னைகள் சற்று தலைதூக்கும். இக்கட்டான சூழலையும் எளிதில் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிதாக வீடு கட்டி வருபவர்களும், அதற்கான முயற்சியில் உள்ளோரும் காரியம் சற்று நிதானமாக நடப்பதாக உணர்வார்கள். உறவினர்களால் கலகம் உண்டாகக்கூடும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவார்கள்.

குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆடம்பர செலவினங்கள் அதிகரித்து வரும் அதே நேரத்தில் உடல்நிலையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் தொல்லை தரலாம். வீண் விவாதம் காரணமாக பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். தொழில்முறையில் ஏப்ரல் மாத இறுதி வரை சிறப்பான தன லாபத்தினையும், மே 1ம் தேதி முதல் கூடுதல் அலைச்சலையும் சந்திக்க நேரிடும். கலைத்துறையினரின் எண்ணம் நிறைவேற சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.நற்பலன்களைக் காணும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: மே 6, 7, 8 பரிகாரம்: செவ்வாய்தோறும் விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வாருங்கள்.

கடகம்:இந்த மாதத்தில் உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக அமையும். அதிகமான பணிச்சுமையை சந்திக்க நேரிட்டாலும், நினைத்த காரியங்களை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் திறனைப் பெற்றிருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதிலும், குடும்ப விசேஷங்களிலும் முக்கியப் பங்காற்றி வருவீர்கள். பேசும் வார்த்தைகளில் கறாரான வார்த்தைகள் வெளிப்படக்கூடும். சமயோஜிதமான செயல்பாடுகள் கடினமான காரியத்தையும் சுலபமாக்கும். கடமையைச் செய்வதில் கவனம் கூடும். தனாதிபதியின் உச்ச பலம் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைத் தரும். சேமிப்புகள் உயரத் துவங்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும்.

இந்த மாதத்தில் எதிர்பாராத தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உயர்பதவி வகிப்போர், சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக கருதப்படுபவர்கள் போன்றவர்களுடன் புதிய நட்புறவு உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. ஆன்மிகப் பெரியவர்களுடனான சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். வண்டி, வாகனங்கள் சார்ந்த செலவினங்கள் அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டினில் புதிய மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். ஏ.சி. ஃபிரிட்ஜ் போன்ற ஆடம்பரப் பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தத்தினைத் தோற்றுவிக்கலாம்.

ஆயினும் அவர்களது பெருமை பேசுவதில் தனி இன்பம் காண்பீர்கள். அவர்களது பெயரில் புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் உருவாகும். கடன்பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதியருக்குள் வீண் மனஸ்தாபம் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களை உருமாற்றம் செய்ய காலநேரம் கனிந்து வரும். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினைக் காண்பார்கள். சுயதொழில் செய்வோருக்கு சாதகமான நேரம் இது. கலைத்துறையினரின் திறமை வெளிப்பட சந்தர்ப்பம் கிட்டும். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: மே 9, 10.பரிகாரம்: அமாவாசை நாளில்.அரசமரத்தடி நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

சிம்மம்:ராசிநாதன் சூரியனின் உச்சம் பெற்ற நிலை இந்த மாதத்தில் உங்களுக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். செயல்களில் வேகமும், விவேகமும் கூடும். உங்கள் செயல்வேகத்தோடு ஒத்துழைக்க உடனிருப்பவர்கள் சிரமப்படுவார்கள். செயல்வேகம் கூடும். அதே நேரத்தில் பணிச்சுமையும் அதிகரித்திருப்பதாக உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களை அரவணைத்துச் செல்வதில் சிறப்பு கவனம் தேவை. பேசும் வார்த்தைகளில் சமயோஜிதமான கருத்துக்கள் அதிகமாக இடம் பிடிக்கும். தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்து அர்த்தமுள்ள வார்த்தைகளை மட்டும் பிரயோகித்து வருவதன் மூலம் உங்கள் காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.

தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றி வரும். இந்த மாதத்தில் உண்டாகும் புதிய நட்புறவு காலத்திற்கும் தொடரும் வாய்ப்பு உண்டு. தனகாரகன் சுக்கிரனின் சாதகமான நிலை சிறப்பான பொருள் வரவினைத் தரும். ஏப்ரல் 30ம் தேதி முதல் வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். புதிதாக மனை, நிலம் வாங்க முயற்சிப்போர் வில்லங்கத்தை சரிபார்த்து வாங்கவும். உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு.

பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்பட்டு வருவீர்கள். பரம்பரைச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வினைக் காண்பார்கள். அரசுப் பணியாளர்கள் விரும்பிய இடமாற்றத்தினை அடைவார்கள். சுயதொழில் செய்வோர் தொழில் சிறக்கக் காண்பார்கள். கலைத்துறையினருக்கு போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். நினைத்ததை நடத்தி முடிப்பதற்கான கால நேரம் சாதகமாக அமைந்துள்ளது. வளர்ச்சி தரும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 14, 15, மே 11, 12.பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

கன்னி:மாதத்தின் துவக்கத்தில் சாதகமான பலன்களைக் கண்டு வரும் உங்களுக்கு மே மாதம் 4ம் தேதி முதல் ராசிநாதன் புதனின் எட்டாம் இடத்துச் சஞ்சாரம் சற்று சிரமத்தினைத் தரக்கூடும். சூரியனோடு புதன் இணைந்து எட்டாம் இடத்தினில் சஞ்சரிப்பதால் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் செய்து முடிக்க அதிகப்படியான அலைச்சலை சந்திக்க நேரிடும். எதிர்பாராத விதமாக உண்டாகும் அதிகப்படியான செலவுகளால் சற்று சிரமப்படுவீர்கள். குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் உருவாகும்.

அதே நேரத்தில் செலவிற்குத் தகுந்தவாறு ஏதேனும் ஒரு வகையில் பண வரவு இருந்து வரும். ஒரு சில விஷயங்களில் முன் வைத்த காலை பின் வைக்க வேண்டியிருக்கும். செய்ய நினைக்கும் செயல்களை ஏப்ரல் மாதத்திற்குள் செய்து முடிப்பது நல்லது. புதிய நண்பர்களால் தொல்லைகள் உருவாகலாம். உடன்பிறந்தோர் உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார்கள். செல்போன், இன்டர்நெட் முதலான தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் சிரமத்தினையும், இரவு நேரத்தில் சாதகமாகவும் பணி செய்யும்.

மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. ஆடம்பர செலவுகளும் அதிகரிப்பதால் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல நினைப்போர் அந்த நேரத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். உத்யோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் நற்பெயர் கண்டு வருவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு வியாபாரம் சிறக்கும். கலைத்துறையினர் தடைகளை சந்திப்பார்கள். கனவுத் தொல்லையால் இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கமின்றி சிரமப்பட நேரிடும். தடைகளைத் தாண்டி வெற்றி காண வேண்டிய மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 16, 17, மே 13பரிகாரம்: புதன்கிழமையில் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.

துலாம்:ராசிநாதன் சுக்கிரனின் தற்போதைய சஞ்சார நிலை எந்த ஒரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையைத் தோற்றுவிக்கும். உங்கள் காரியங்களைச் செய்து முடிக்க மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். நண்பர்களின் துணையோடு இழுபறியில் இருந்து வரும் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஏப்ரல் 21 முதல் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமையும். ஒவ்வொரு விஷயத்திலும் துவக்கத்தில் தடைகளைச் சந்தித்தாலும், முடிவினில் சாதகமான பலன்களை காண்பீர்கள். எதிர்பாராத செலவினங்கள் அதிகரிக்கக்கூடும். செலவிற்கேற்ற பொருள்வரவு இருக்கும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை.

குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பேசும் வார்த்தைகளில் விவேகம் நிறைந்த கருத்துக்கள் அதிகம் வெளிப்படும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து போவதால் சற்று சிரமத்திற்கு ஆளாவீர்கள். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செயலில் இறங்குவது நல்லது. வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றும் முயற்சியைத் தள்ளி வைக்கவும். பிரயாண செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

பிள்ளைகளின் செயல்களால் மன வருத்தம் உண்டாகக் கூடும். நம்மை யாரும் புரிந்துகொண்டு நடக்கவில்லையே என்ற ஏக்கம் மனதினை ஆக்கிரமிக்கும். தம்பதியருக்குள் வீண் விவாதம் காரணமாக மனஸ்தாபம் தோன்றி மறையும். கலைத்துறையினர் தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேரிடும். கூட்டுத்தொழில் சிறப்பாகச் செல்லும். பெண்கள் பிரச்னைக்குரிய நேரத்தில் அதிக வாதம் செய்யாமல் அமைதியாக இருப்பது நல்லது. சிரமங்களை எதிர்கொண்டு வெற்றி காண வேண்டிய மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 18, 19.பரிகாரம்: சித்ரா பௌர்ணமி நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

விருச்சிகம்:இந்த சித்திரை மாதத்தில் ஆறாம் இடத்தில் முக்கியமான கிரஹங்கள் இணைவதாலும், ஏழரைச் சனியின் தாக்கத்தாலும் சற்று சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆயினும் ராசிநாதன் செவ்வாய் ஏப்ரல் 30ம் தேதி முதல் உச்சபலம் பெறுவதால் எவ்விதமான சிரமத்தினையும் சமாளிக்கும் திறன் உருவாகும். எதையும் தாங்கும் மன உறுதியைப் பெற்றிருப்பீர்கள். தொழில்முறை மட்டுமல்லாது இதர விஷயங்களிலும் கூட ஏட்டிக்குப் போட்டியான சூழலை உணர்ந்து வருவீர்கள். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறியைத் தரக்கூடும். மிகவும் நெருக்கமான நபர் ஒருவர் உங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக நடக்கக் காண்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்னையில் இயன்றவரை தலையிடாமல் இருப்பது நல்லது.

ஏப்ரல் 21 முதல் சுக்கிரன் எட்டில் அமர்வதால் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செல்ல வாய்ப்பு கூடி வரும். ஏதேனும் ஒரு வகையில் சுப செலவுகளை சமாளிக்க பொருள் வரவு தொடர்ந்து கொண்டிருக்கும். உடன்பிறந்தோரை நம்பி ஒப்படைத்த காரியங்களில் இழுபறி உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை பல புதிய வாழ்வியல் நடைமுறைகளைக் கற்றுத் தரும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும்.

புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். வீட்டிற்குத் தேவையான ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவார்கள். மே4ம் தேதிக்குப் பிறகு உண்டாகும் வெளிவட்டாரத் தொடர்பு எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில் அமையும். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிட்டும். சுயதொழில் செய்வோர் போட்டியான சூழலைக் காண்பார்கள். சரிசம பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 20, 21.பரிகாரம்: செவ்வாய்தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாருங்கள்.

தனுசு:இந்த மாதத்தின் துவக்கத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். சிந்தனையில் தோன்றுவதை உடனுக்குடன் செய்து முடிக்க எண்ணுவீர்கள். ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் செவ்வாய் உங்கள் சுறுசுறுப்பையும் செயல்திறனையும் உயர்த்துவார். ஏப்ரல் 30ம் தேதி முதல் உங்கள் பணிகளுக்கு அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவும். அதே நேரத்தில் அடுத்தவர்களை நம்பி அகலக்கால் வைக்கலாகாது. நெருங்கிய நபர் ஒருவரால் நம்பிக்கை துரோகத்தினை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயலில் இறங்குவது உத்தமம். குடும்பத்தில் மே மாத வாக்கில் சலசலப்பு உருவாகும்.

பொருளாதார முன்னேற்றம் என்பது சீராக இருந்து வரும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனை அளிக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். விருந்து, விசேஷங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்கும் சூழல் உருவாகும். உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உங்களின் சிந்தனைகளும், கருத்துக்களும் நான்குபேர் மத்தியில் நன்மதிப்பினைப் பெற்றுத் தரும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த கடனுதவிகள் கிட்டும்.

பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும். அவர்களது முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்துவீர்கள். மே மாதத்தின் முதல் வாரத்தில் அநாவசிய பிரச்னைகளை சந்திக்க நேரும். முன்பின் தெரியாத பெண்களுக்கு உதவி செய்வதை தவிர்ப்பது அவசியம். வீண்வம்பில் மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் வீண் பழி சுமக்க நேரலாம், எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு போட்டி அதிகரிக்கும். கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 22, 23.பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் உழவாரப்பணி செய்யுங்கள்.

மகரம்:இக்கட்டான சூழலில் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மனப்பக்குவத்தினைப் பெற்றுள்ளீர்கள். ஏப்ரல் 30ம் தேதி முதல் ஜென்ம ராசியில் உச்ச பலத்துடன் அமர உள்ள செவ்வாய் உங்கள் செயல்வேகத்தினை உயர்த்துவார். அதுவரை மனதிற்குள் இருக்கும் சுமைகளை வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மனம் கலங்கி வருவீர்கள். நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் தானாக நடக்கும் என்பது போன்ற எண்ணம் மனதினை வியாபித்திருக்கும். உங்கள் உணர்வுகளை நெருங்கியவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். எவருடனும் பகைமை பாராட்டாது அனைவரையும் அனுசரித்து நடப்பீர்கள். பொருளாதார நிலை சீராக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

நான்கு பேர் மத்தியில் அதிகம் பேசாது அடுத்தவர்களை பேசவிட்டு மனதிற்குள் உள்வாங்கி பதிலளித்து நற்பெயர் காண்பீர்கள். உடன்பிறந்தோரின் விருப்பங்களை அனுசரித்துச் செல்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். மே மாதத்தின் முதல்வாரத்தில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். புதிதாக மரச்சாமான்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். ருசியான உணவில் நாட்டம் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிரானதாக அமைந்தாலும், உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். சுயதொழில் செய்வோர் ஏப்ரல் 21ம் தேதி முதல் நல்ல தனலாபத்தைக் காண்பர். உத்யோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தினை அடைவர். கணவன், மனைவி இணைந்து செயல்படும் செயல்கள் சிறப்பான வெற்றியைக் காணும். குடும்பப் பெரியவர் ஒருவருடனான சந்திப்பு மன நிம்மதியைத் தரும். கலைத்துறையினரின் கற்பனைகள் பாராட்டினைப் பெறும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 24, 25, 26.பரிகாரம்: புற்று மாரியம்மனை வணங்கி வாருங்கள்.

கும்பம்:சித்திரை மாதத்திய கிரஹ நிலை உங்கள் ராசிக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. மூன்றாம் இடத்து சூரியன் மனதில் அசாத்தியமான தைரியத்தைத் தருவார். ஏப்ரல் 21ம் தேதி முதல் சுக ஸ்தானத்தில் சுக்கிரனின் ஆட்சி பலத்தால் சுகமான வாழ்வியல் நிலையைக் காண்பீர்கள். எந்த ஒரு தடையையும் கண்டு மனம் தளராது செயல்பட்டு வருவீர்கள். சூரியன், புதனின் இணைவு எங்கே, எப்படி செயல்பட வேண்டும் என்ற பாங்கினை உங்களுக்குக் கற்றுத்தரும். தைரிய மிகுதியோடு காரியமாற்றி வருவீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இடம் பிடிக்கும். மே3ம் தேதி வரை எதிர்பார்க்கும் பணவரவு வந்து சேரும். விவேகம் நிறைந்த பேச்சுக்கள் உங்களை தனித்துக் காட்டும்.

அளந்து பேசினாலும் புள்ளிவிவரத்துடன் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் தக்க சமயத்தில் செயலிழந்து சிரமத்தினைத் தரக்கூடும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்னைகள் விலகும். பொறுப்புகள் அதிகரித்திருப்பதாக உணர்வீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகளை மேற்கொள்ள கால நேரம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் செயல்கள் உங்களை உற்சாகம் கொள்ளச் செய்யும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் நின்று செயல்படுவார். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தினை காண நேரிடும். சுயதொழில் செய்வோர் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் பாராட்டு பெறுவர். ஓய்வின்றி சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 27, 28.பரிகாரம்: பிரதோஷ நாளில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மீனம்:ராசிநாதன் குருபகவானின் எட்டாம் இடத்து சஞ்சாரத்தால் செலவுகள் கூடும். சித்திரையின் துவக்கத்தில் பொருளாதார ரீதியாக சற்று தடுமாறுவீர்கள். தற்போதைய கிரஹ நிலை அதிக செலவினைத் தந்தாலும் ஏப்ரல் 20ம் தேதி முதல் எதிர்பாராத பண வரவினைக் காண்பீர்கள். செயல்களில் உண்டாகும் காரியத்தடை உங்களை பொறுமையிழக்கச் செய்யும். சோதனைக்குரிய காலத்தில் நிதானம் அவசியம் என்பதை உணர்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பும் சலசலப்பும் மாறி மாறி இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளினால் சுமை அதிகரித்திருப்பதாக உணர்வீர்கள். பேசும் வார்த்தைகள் உங்கள் மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தும். அவ்வப்போது நீங்களும் டென்ஷனாகி உடனிருப்பவர்களையும் டென்ஷனாக்கி விடுவீர்கள்.

இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவதன் அவசியத்தை உணர்ந்துகொள்வது நல்லது. சேமிப்புகள் கரைவதாக உணர்வீர்கள். ராசிநாதன் குரு பகவானின் சாதகமற்ற நிலை சோதனையைத் தந்தாலும் மனதினில் தைரியத்தினையும், தன்னம்பிக்கையையும் கொண்டிருப்பீர்கள். சூரியன், செவ்வாயின் பலத்தினால் எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தினை அடைவீர்கள். இடைத்தரகர்களால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதால் முக்கியமான பணிகளில் நேரடியாக செயல்படுவது நல்லது. ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும்.

பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைவதாக எண்ணுவீர்கள். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் முறையில் ஒரு சில இடையூறுகளை சந்திக்க உள்ளீர்கள். உத்யோகஸ்தர்கள் அடுத்தவர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள். கலைத்துறையினர் விடாமுயற்சியால் முன்னேற்றம் காண்பர். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 29, 30.பரிகாரம்: விநாயகப்பெருமானுக்கு சிதறுதேங்காய் உடைத்து வழிபடுங்கள்.