கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தால் பரபரப்பு!!

154

சிறுமியின் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர்கள் 48 வயதான பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தங்கள் உறவுக்கார பெண்ணான அபிராமி (15) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்ந்து வந்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் ஊர் ஊராக சென்று குறி சொல்லும் தொழில் செய்து வந்தார். கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக வள்ளியூரில் வாடகைக்கு வீடு எடுத்து பாலகிருஷ்ணன் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார்.

இதற்கிடையில் டிசம்பர் மாதம் 18ம் தேதி வீட்டு வேலை சரியாக செய்யவில்லை என பாலகிருஷ்ணன் திட்டியதாகவும், அதில் கோபித்துக்கொண்டு அன்று முதல் அபிராமி மாயமாகிவிட்டதாகவும் இருவரும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தெற்கு வள்ளியூர் பகுதியில் கிராமத்திற்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றில் சிறுமியின் உடல் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இறந்த நிலையில் கிடப்பது அபிராமி தான் என்பதை அடையாளம் கண்டனர். அதன்பிறகு சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காணாமல் போன சிறுமி அழுகிய நிலையில் கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.