பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் : தலைமறைவான கணவன்!!

80

தற்கொலைக்கு முயன்ற தாய்

பீகார் மாநிலத்தில் கணவன் மனைவியிடையே நடந்த கருத்து வேறுபாட்டில் மூன்று குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் கர்ஹாரியா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மது போதைக்கு அடிமையாகியிருந்த மாற்றுத்திறனாளி கணவன், மனைவியிடம் ரூ.500 கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் மனமுடைந்த அந்த பெண், தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கழிவறை தொட்டியில் தூக்கிவீசிவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்த பக்கத்துக்கு வீட்டு பெண் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது உயிருக்கு போராடிய அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக தொட்டியில் தூக்கி வீசப்பட்ட ஒன்பது மாத குழந்தையான ஓம்ராஜின், இரண்டு வயதான சோனம் பார்தி மற்றும் நான்கு வயதான சுசந்தின் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தலைமறைவாகியுள்ள பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர்.