மகள் தொலைந்த போது தான் அந்த வலியை உணர்ந்தேன் : கண்ணீருடன் பேசிய ஹரிணியின் தாய்!!

140

ஹரிணியின் தாய்

காணாமல் போன சிறுமி ஹரிணி மீண்டும் கிடைத்த நிலையில் அது குறித்து சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் சேர்ந்த நாடோடி தம்பதி வெங்கடேசன்- காளியம்மாளின் மகள் ஹரிணி (2) கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மாயமானார்.

இந்நிலையில் தற்போது அவர் திருப்போரூரில் மீட்கப்பட்டுள்ளார். ஹரிணி மீண்டும் கிடைத்தது தொடர்பாக பேசிய அவரது தாய், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல பேர் தங்களின் குழந்தைகளை தொலைத்துள்ளனர் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதன் வலி என் மகள் தொலைந்தபோது தான் எனக்குத் தெரிந்தது.

நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை, நான் பத்து மாதம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற குழந்தையைத் தொலைத்துவிட்டு எப்படி நிம்மதியாக இருக்க முடியும். என் மகள் கண்டிப்பாக என்னிடம் திரும்பி வருவாள் என்ற ஒரே எண்ணத்துடன் மட்டும் இங்கு அமர்ந்திருந்தோம்.

கடவுள் ஆசீர்வாதத்தால் நல்லபடியாக என் குழந்தை கிடைத்துவிட்டது. யானைக்கு பலம் தும்பிக்கை மனிதனுக்கு பலம் நம்பிக்கை எனக் கூறுவார்கள். அதை இன்று தான் நான் உணர்ந்தேன் எனக் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.