200 அடி குழிக்குள் சிக்கிய சிறுவன் : 16 மணி நேர போராட்டம் : சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

610

சினிமாவை மிஞ்சிய சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 6 வயது சிறுவன் 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள கிராமத்தில் நேற்று சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்துள்ளது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெற்றோரின் 6 வயது ஆண் குழந்தையான ரவி பண்டிட், திடீரென மாலை 5 மணியளவில் மாயமாகியுள்ளான்.

சுற்றி முற்றிலும் தேடி பார்த்த பெற்றோர், அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மகனின் அழுகுரல் சத்தம் கேட்பதை கவனித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிஸார் கயிற்றின் மூலம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதில் குழந்தை காயமடைந்ததை அடுத்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வந்த மீட்பு படையினர் குழிக்குள் ஆக்சிஜனை செலுத்தி மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதற்கிடையில் கிராம மக்களும் மீட்பு படையினருக்கு உதவி செய்யும் விதமாக குழிக்கு அருகில் பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டெடுத்தனர். அதன் பிறகு அவசரமாக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.