13 நிமிடங்கள் வரை தண்ணீருக்கடியில் மூச்சை நிறுத்தும் அபூர்வ மீன் மனிதர்கள்: கடல் நாடோடிகளின் கதை!!

1403

கடல் நாடோடிகள் என்று அழைக்கப்படும் இந்தோனேஷிய பழங்குடியினர் 13 நிமிடங்கள் வரை தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கும் தன்மையுடையவர்கள் என்றும் இதனால் காலப்போக்கில் அவர்களுடைய கணையத்தின் அளவு சாதாரண மனிதர்களின் கணையத்தின் அளவை விட 50 சதவிகிதம் பெரிதாக ஆகிவிட்டதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

ஆழ்கடல் மீன் பிடிப்பவர்களான Bajau பழங்குடியினரின் கணையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாறுதல் அறிவியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.1000 ஆண்டுகளுக்கு மேலாக கடல் நாடோடிகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் தெற்கு ஆசியாவின் கடல்களில் படகு வீடுகளின் உதவியுடன் அலைந்து திரிந்து தண்ணீரில் குதித்து ஈட்டிகளின் உதவியால் மீன் பிடித்து வாழ்ந்தவர்கள்.

தற்போது இந்தோனேஷிய தீவுகளைச் சுற்றி வாழ்ந்து வரும் இவர்கள் நீண்ட நேரம் தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கி மீன் பிடிப்பதன்மூலம் புகழ் பெற்று வருகிறார்கள்.தண்ணீருக்கடியில் பார்ப்பதற்கான கண்ணாடி மற்றும் மேலே வராமல் தடுக்க உதவும் சில பளுவான பொருட்கள் உதவியுடன் 230 அடி ஆழம்வரை நீந்தி மீன் பிடிப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

ஒரு மனிதன் தண்ணீருக்கு அடியில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக இருக்கும்போது அவனது உடல் இயக்கங்களை சீராக இயங்கச் செய்வதில் மனித கணையத்தின் பங்கு முக்கியமானது.தண்ணீருக்கடியில் ஆழத்தை நோக்கி நீந்தும்போது இதயத் துடிப்பு குறையும், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் பாயும், கணையம் சுருங்கி ஆக்சிஜன் நிறைந்த சிவப்பு இரத்த செல்களை இரத்த ஓட்டத்திற்குள் அனுப்பும்.

கணையம் சுருங்குவதால் உடலில் ஆக்சிஜனின் அளவு ஒன்பது சதவிகிதம் வரை அதிகரிக்கும்.ஒரு புதிய ஆய்வு Bajau பழங்குடியினரின் கணையம் மற்ற மனிதர்களின் கணையத்தைவிட 50 சதவிகிதம் பெரிதாக உள்ளதைக் கண்டறிந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Melissa Ilardo என்னும் அறிவியலாளர் கூறும்போது, சீல்கள் ஆழ்கடலில் மூழ்கி மீன் பிடித்தலைத் தெரிந்து கொண்டபோது அவற்றின் கணையத்தின் அளவு பெரிதானதுபோலத்தானே மனிதர்களுக்கும் நிகழும் என்று யோசித்ததாகக் கூறுகிறார்.

எனவே Bajau பழங்குடியினரிடையே தங்கி அவர் ஆய்வுகளை மேற்கொண்டபோது இந்த அரிய விடயத்தைக் கண்டறிந்தார்.ஆழ்கடல் மீன் பிடிக்கும் இனமாக அவர்கள் மாறியதிலிருந்து அதற்கு ஏற்றாற்போல் அவர்களது கணையத்தின் அளவும் பெரிதாகியுள்ளதை அவர் கண்டறிந்துள்ளார்.

இதன்மூலம் மனிதன் எவ்வளவு மோசமான நிலையில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் நடக்கை மாற்றங்கள் மூலம் அந்த சூழலோடு பொருந்தி வாழ இயலும் என்பது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.