இதை சொல்ல நான் வெட்கப்பட்டதில்லை : பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு!!

647

பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு

என்னுடைய தொடக்கக் காலத்தைப் பற்றியோ போராட்டங்கள் பற்றியோ சொல்ல வெட்கப்பட்டதில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடந்த முறை களமிறங்கிய ஸ்மிருதி இராணி, இந்த முறையும் களமிறக்கப்பட்டுள்ளர்.

கடந்த முறை வேட்புமனு தாக்கலில் தன்னை பட்டதாரி என்று கல்வி தகுதி பகுதியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் கல்லூரியில் படிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்தப் பிரச்னை ஏற்கனவே இருந்துவருகிறது.

இந்த முறை ஸ்மிருதி தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னை பட்டதாரி என்று குறிப்பிடாமல், டெல்லி பல்கலைக்கழகத்தில் படிப்பை கைவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த முறை வேட்புமனுவில் தவறாக தகவல்களைத் தெரிவித்த ஸ்மிருதி இராணியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த விவாகரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் ஸ்மிருதி இரானியைக் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்தக் கிண்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், குஷ்புவும் கமலும் (என்னுடைய அக்கா, மாமா போன்றவர்கள்) தங்கள் பட்டப்படிப்பை முடித்து விட்டார்களா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடுதான் முக்கியம். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் எதுவும் செய்யவில்லை. ராகுலைவிட ஸ்மிருதி இராணி நிறைவாகப் பணியாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுதொடர்பாக பல ட்வீட்களை காயத்ரி தொடர்ச்சியாக வெளியிட்டார்.

காயத்ரி ரகுராமின் இந்த ட்வீட்களுக்கு நடிகையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பிற்குரிய காயத்ரி, உங்கள் மாமா (கமல்), அல்லது நான் பட்டப்படிப்பு முடித்து விட்டோம் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறோமா?

எங்களுடைய தொடக்கக் காலத்தைப் பற்றியோ போராட்டங்கள் பற்றியோ சொல்ல வெட்கப்பட்டதில்லை. எங்களுக்கு போலிவாதங்கள் மீதும், தவறான காகிதத் துண்டின் மீதும் நம்பிக்கையில்லை. நாங்கள் மக்களுக்கு சேவையாற்றுவதை மட்டுமே நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.