ஊரடங்கு உத்தரவை மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்!!

200

உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்

அசாம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஊரடங்கு உத்தரவையும் மீறி உதவி செய்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கலவரத்தால் ஹைலிகாண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூபன் தாஸ் என்பவரது மனைவி நந்திதாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ஆம்புலன்ஸ் நிர்வாகம் போன் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளனர்.

12 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு, ஆட்டோ, கார் என ஒருவரும் வர மறுத்துவிட்டனர். இதற்கிடையில் நந்திதாவிற்கும் பிரசவ வலி அதிகரித்துள்ளது. மனைவியை சரிசெய்ய முயன்ற ரூபன் தாஸ், உதவிக்கு ஆள் யாரும் இல்லாததால் செய்வதறியாமல் திகைக்க ஆரம்பித்துள்ளார்.

அந்த சமயத்தில் தான் ரூபன் தாஸின் பக்கத்து வீட்டை சேர்ந்த மக்பூல் ஹுசைன் என்கிற ஆட்டோ ஓட்டுநர் உதவ முன்வந்துள்ளார் . ஊரடங்கு உத்தரவையும் மீறி நந்திதாவை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பியுள்ளார். அந்த நேரத்தில் பயத்துடனே இருந்த ரூபன் தாஸிற்கு ஆறுதல் கூறியபடியே, காலியாக இருந்த சாலையில் வேகமாக ஆட்டோவை ஒட்டி நந்திதாவை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அங்கு நந்திதாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாந்தி (சமாதானம்) என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாட்ட இணை ஆணையர் கீர்த்தி ஜாளி, ரூபன் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை தன்னுடைய கைகளில் ஏந்தி கொஞ்சி மகிழ்ந்த அவர், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி எனக்கூறினார். மேலும், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் போது நந்திதாவை, மக்பூல் ஆட்டோவில் அழைத்து சென்றிருப்பது மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி என்றும் கூறியுள்ளார்.