இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் கால்களால் விமானம் ஓட்டும் பெண்!!

334

விமானம் ஓட்டும் பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கோக்ஸ்(30). விமானியான இவருக்கு பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை. இவர் பிறந்தபோது, பெற்றோரே இவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.

எனினும், ஜெஸ்ஸிகாவை முழு சுதந்திரத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வளர்த்து வந்துள்ளனர். சிறு வயதில் ஒரு விமானப் பயணத்தின்போது, ஜெஸ்ஸிகாவுக்கு விமானி ஆக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தனது மேற்படிப்புக்கு பிறகு, விமானம் ஓட்டும் பயிற்சியில் இறங்கினார் ஜெஸ்ஸிகா. கடும் பயிற்சிக்கு பிறகு 2008ஆம் ஆண்டு, லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்குவதற்கான சான்றிதழை ஜெஸ்ஸிகா பெற்றார்.

ஒரு விமானியாக மட்டும் இவரைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுவதில்லை. ஏனேனில் கார் ஓட்டுதல், சமையல், கராத்தே என அனைத்து துறைகளிலும் ஜெஸ்ஸிகா ஒரு ரவுண்ட் வருகிறார்.

மேலும் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராக இருக்கும் ஜெஸ்ஸிகா, பல மேடைகளில் தன்னுடைய பேச்சால் பலரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதுகுறித்து ஜெஸ்ஸிகா கூறுகையில்,

‘எனது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. எனது வாழ்க்கையை நான் என் போக்கில் வாழ விரும்பினேன். எனக்கு பல முன்னுதாரணமான ஆட்கள் இருக்கிறார்கள். வரும் தலைமுறைக்கு நானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்தேன்’ என தெரிவித்துள்ளார்.