மகன் கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை நடத்திய தந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!

1120

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த மகன் காதலித்து கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை அவரது தந்தையே ஆடம்பரமாக நடத்தி வைத்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரைப்படத்தை மிஞ்சும் இச்சம்பவம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் நடந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டயம் மாவட்டம் திருனக்கர பகுதியில் குடியிருக்கும் ஷாஜி என்பவரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து, பின்னர் இருவரும் திருமணம் செய்யும் நோக்கில் தலைமறைவாகினர்.

இந்த நிலையில் இளம்பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவான இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

விசாரணையில் இருவருமே திருமண வயதை எட்டவில்லை என்பதால், நீதிமன்றம் இருவரையும் பெற்றோருடன் செல்ல உத்தரவிட்டது. மட்டுமின்றி எதிர்காலத்தில் காதலர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் இரு வீட்டாரும் முழு மனதுடன் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனிடையே குறித்த இளம்பெண் தங்களது குடியிருப்பில் இருந்தபடியே கல்லூரி படிப்பை முடித்தார். அந்த இளைஞர் கல்லூரி விடுதியில் தங்கியபடியே படிப்பை முடித்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞர் இன்னொரு பெண்ணை காதலித்துள்ளார். மேலும், தந்தையுடன் ஐக்கிய அமீரகத்தில் வேலைக்கும் சென்றுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு முதல் காதலியை மறந்த இளைஞர், தமது இரண்டாவது காதலியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தகவலை அறிந்த ஷாஜி தமது மகனை எதிர்த்ததுடன், மகனுக்காக இதுவரை சேகரித்த சொத்துக்களை, மகனால் கைவிட்ட இளம்பெண்ணின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் ஒரு மணமகனையும் தேடிப்பிடித்த அவர் அந்த இளம்பெண்ணின் திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்தி வைத்து தமது சொல்லை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் கோட்டயம் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.