5 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட ஹீரோ : குவியும் பாராட்டு!!

973

ரூப் அகமது தர்

ஜம்மு-காஷ்மீரில் 5 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நபரின் வீரத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியைச் சேர்ந்த ரூப் அகமது தர், பகல்ஹாம் பகுதியில் சுற்றுலா வழிகாட்டியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் உட்பட வந்த ஐந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்தனர். அவர்களுடன் ரூப் அகமதுவும் பயணித்த நிலையில், காற்று வேகமாக வீசியதால் படகு திடீரென்று கவிழ்ந்தது. இதில் பயணிகள் அனைவரும் ஆற்றில் விழுந்தனர். அதனைத் தொடர்ந்து, பதறிய அகமது தர் உடனடியாக ஆற்றில் குதித்து அனைவரையும் பத்திரமாக காப்பாற்றினார்.

ஆனால், அவர் திடீரென ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டார். மேலும், அப்போது அவர் பாதுகாப்பு கவசம் அணியாததால், அவரால் ஆழத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

அதன் பின்னர் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், அகமது தர்-ஐ இரவு வரை தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பாலத்தின் அருகே அவரது உடல் நேற்று கிடைத்ததை, மீட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய ரூப் அகமதுவின் வீரத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவரது துணிச்சலைப் பாராட்டி காஷ்மீர் நிர்வாகம், ரூ.2 லட்சத்தை ரூப் அகமது குடும்பத்திற்கு வழங்கியுள்ளது.