உயிரோடு இருக்கும் 21 வயது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த பெற்றோர்!!

137

தமிழகத்தில் உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டத்தில் உள்ளது குப்பராஜபாளையம் என்கிற கே.ஆர்.பாளையம் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி இவராணி. தம்பதிக்கு அர்ச்சனா (21) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் எங்களது மகள் அர்ச்சனா அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். இவரது பூவுடல் 10.6.2019ம் திகதி மதியம் 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என பேனர் பிரிண்ட் செய்து அதை தெருவில் கட்டி வைத்துள்ளார் சரவணன்.

இந்த பேனர் அக்கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், அர்ச்சனா இன்னும் இறக்கவில்லை, உயிரோடு உள்ளார். அர்ச்சனா அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்துள்ளார். அவர் வேறு சாதியை சேர்ந்தவராம்.

இதனால் இவர்களது காதலை வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் கடந்த வாரம் இறுதியில் தனது வீட்டில் இருந்து ரகசியமாக வெளியேறி காதலனை மணந்துள்ளார். இதனால் அதிருப்தியான அர்ச்சனாவின் குடும்பத்தார், தனது மகள் இறந்துவிட்டதாக பேனர் அச்சடித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.