96 குழந்தைகளின் உயிரை பறித்தது லிச்சி பழம்? ஒரே மாநிலத்தில் தொடரும் இறப்பு!!

620

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 96-ஆக அதிகரித்துள்ள நிலையில், வெயில் காரணமாக 61 பேர் உயிரிழந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் தண்ணீருக்காக மக்கள் தெருக்களில் அலைந்து திரியும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்யும் அளவிற்கு இருக்கிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டது. கடந்த ஜூன் 1-ஆம் திகதி பிறகு நோய் அறிகுறியுடன் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 197 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 91 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 96 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனிடையே, பீகாரில் கடும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வெப்ப அலையால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுரங்காபாத், கயா, நவாடா ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 9 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கயாவில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.2 நாட்களில் மட்டும் அவுரங்காபாத்தில் 25 பேர் உயிரிழந்தது பெரும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதால் வரும் 19-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குழந்தைகள் லிச்சி பழம் சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது, அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக மூளைகாய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.