திருமண நாளில் திடீரென மாயமான மணமகன் : அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார்!!

119

மாயமான மணமகன்

நாகர்கோவிலில் திருமண நாளன்று மணமகன் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொறியாளராக வேலை செய்து வரும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளைஞருக்கும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து இருவீட்டாரும் சேர்ந்து பத்திரிக்கை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தனர். திருமணத்தை ஒட்டி இருவீட்டிலும் ஏராளமான உறவினர்கள் குவிந்திருந்தனர். மணமகனும் இரண்டு நாட்களுக்கு முன்னே ஊருக்கு திரும்பியுள்ளார்.

நேற்றிரவு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மணமகன் சிரித்து பேசிக்கொண்டிருந்துள்ளார். 9 மணியளவில் நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிய மணமகன், குளிர்பானம் வாங்கிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பிவிடுவேன் என கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பிவில்லை. இதனால் அங்கு குழுமியிருந்த உறவினர்கள் அனைவருமே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாப்பிள்ளை கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்கு செல்போன் சிக்னலை வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒருமலை கிராமத்தை காட்டியது. இதனால் மணமகன் கடத்தப்பட்டுள்ளாரா என்கிற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.