கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் : பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை!!

221

இறுதிக் கிரியை

இலங்கை திஸ்ஸமாராம, கிரிந்த கடலில் நீராட சென்றபோது அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பலியான தந்தை மற்றும் இரு மகள்மாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன.

மூன்று பேரினதும், சடலங்கள் திஸ்ஸமாராம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

சடலங்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக் கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றுள்ளன.

இதேவேளை ஹட்டன், குடாகம பகுதியில் உள்ள பொது மயானத்தில் தந்தை மற்றும் இரு மகள்மாரினதும் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட சென்ற குடும்பத்தினர் கடல் அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதன்போது தந்தையும் ஒரு மகளும் பலியானதுடன், தாயும் மற்றுமொரு மகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி மற்றைய மகளும் உயிரிழந்தார். இந்த அனர்த்தத்தில் நுவான் இந்திக்க விஜேயசூரிய (39 வயது), நேசத்மா சாகதி விஜயசூரிய (6 வயது), நதிஷா ஈனோமி (4 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.