குழந்தையுடன் ஆற்றில் மூழ்கி இறந்த தந்தை : அகதிகளின் வலியை சொல்ல இந்த ஒரு படம் போதும்!!

560

அகதிகளின் வலி

காண்போர் நெஞ்சை பதற வைக்கும் வண்ணம், இரண்டு வயது குழந்தையுடன் அதன் தந்தை இறந்து கிடைக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அகதிகளின் வலியை உலகுக்கு உரக்கச் சொல்லுகிறது. இறந்து கிடைக்கும் அந்த நபரின் பெயர் Óscar Alberto Martínez Ramírez (25).

ஏப்ரல் மாதம், தங்கள் சொந்த நாடான எல் சால்வடாரை விட்டு மெக்சிகோவிலுள்ள ஒரு அகதிகள் முகாமுக்கு வந்த Martínezஇன் குடும்பம், இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதற்காக காத்திருந்திருக்கிறது.

ஆனால் தூதரகத்தில் சென்று விண்ணப்பம் பெறுவதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கூட கிடைக்காத நிலையில்,காத்திருந்து ஏமாந்து பின்னர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய திட்டமிட்ட Martínez, Rio Grande ஆற்றை நீந்திக் கடக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

முதல் கட்டமாக தனது மகளை ஆற்றின் மறுபக்கம் கொண்டு சேர்த்த Martínez, பின்னர் வந்து மனைவி Tania Vanessa Ávalos (21)ஐ அழைத்து செல்லலாம் என எண்ணி ஆற்றில் இறங்கிய நேரத்தில், குழந்தை பயந்து தண்ணீரில் குதித்திருக்கிறாள்.

பதறிப்போன Martínez அவளைக் காப்பாற்ற மீண்டும் நீந்திச் செல்ல, ஆற்று வெள்ளம் வேகமாக அவர்களை இழுத்து சென்றிருக்கிறது. கண் முன்னே கணவனும் மகளும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு கதறி அழுதும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, தேடுதல் பணி துவங்கியிருக்கிறது.

ஞாயிறு துவங்கி திங்கள் வரை தேடிய நிலையில், ஆற்றின் மறுபுறம் Martínez மற்றும் அவரது மகள் வலேரியா ஆகியோரின் சடலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. அமெரிக்க தூதரகத்தில் Martínez குடும்பத்திற்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. ஆனால் முகாம் இயக்குநர் ஒருவர் கூறும்போது நாளொன்றிற்கு 40 முதல் 45 புலம்பெயர்தல் நேர்காணல்கள்தான் நடக்கும் என்றும், 800 முதல் 1,700பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எப்படியும் அமெரிக்கா சென்று புது வாழ்வை துவங்கலாம் என்ற கனவுடன் சொந்த நாட்டை விட்டு வந்த ஒரு தந்தையும் மகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இத்தனை உயிர் பலிகள் கொடுக்கப்பட்டும், அகதிகளின் இந்த வலியும் வேதனையும் புரிய வேண்டியவர்களுக்கு எப்போது புரியுமோ தெரியவில்லை.