அவள் பெயர் வேண்டாம் : ஒரு சாதனை மாணவியின் கதை!!

237

ஒரு சாதனை மாணவியின் கதை

“சில நாள் ரொம்ப வருத்தமாயிடுச்சுனா, அன்னிக்கு எங்கப்பாகிட்டே போயி சண்டை போடுவேன். அவரும் ‘தப்பு பண்ணிட்டேன்மா’ என்று கலங்குவார்.” அந்தப் பொறியியல் கல்லூரியில் அன்றைக்கு ஃபிரெஷ்ஷர் டே. அதாவது, முதல் வருட மாணவர்களின் கல்லூரி முதல் நாள் அது. அந்தக் கல்லூரியின் பிரின்சிபால் டாக்டர் ஜே. எம். மதனா மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கையில்,

யதேச்சையாக ஒரு மாணவியிடம் ‘உன் பெயர் என்ன; உன் டிபார்ட்மென்ட் என்னம்மா’ என்று கேட்கிறார். ‘எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிக்கேஷன் டிபார்ட்மென்ட்’ என்று தன் துறையின் பெயரை சத்தமாகச் சொன்ன அந்த மாணவி, தன் பெயரை மட்டும் வாய்க்குள்ளேயே முணுமுணுப்பதுபோல சொல்கிறார். அந்த மாணவி சொன்னது காதில் சரியாக விழாததால், பிரின்சிபால் மறுபடியும் பெயரைக் கேட்டுள்ளார்.

அந்த மாணவி மறுபடியும் அதே தொனியிலேயே தன் பெயரைச் சொல்ல, இந்த முறை அந்த மாணவியின் அருகில் இருந்த மற்ற மாணவிகள் ‘வேண்டாம்’ என்று ஒரே குரலில் சத்தமாகச் சொல்கிறார்கள். ‘என்னது ‘வேண்டாம்’ என்று ஒரு பெயரா ?’ என்று வியப்போடு கேட்கிறார்.

அன்றைக்கு அந்தக் கல்லூரியே அந்த மாணவியின் பெயரைக் கேட்டு அதிர்ந்துபோய் நிற்கிறது. ‘வேண்டாம்’ மட்டும் அமைதியாக நின்றுக்கொண்டிருக்கிறார். ஆனால், அந்த இளம்பெண்ணின் முகம் அவமானத்தில் சிவந்து, கண்ணோரங்களில் நீர்த்துளிகள் உதிர்ந்துவிடட்டுமா என எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன.

”என் பேரை முதல் தடவையா கேட்கிற எல்லோரும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருந்தாலும், அந்த அனுபவத்தை ஒவ்வொரு தடவை கடக்கிறப்போவும் நான் தடுமாறிப்போயிடுறேன் மேம்” என்று பேச ஆரம்பிக்கிற வேண்டாம், சென்னை குன்றத்தூரில் இருக்கிற சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் தற்போது ஃபைனல் இயர் எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படித்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது, இவரைப் பற்றி நாம் பேசுவதற்குக் காரணம் இவருடைய பெயர் மட்டுமல்ல, கேம்பஸ் இன்டர்வியூவில் ஜப்பானிய கம்பெனி ஒன்றுக்கு செலெக்டாகியிருப்பதும், வருடம் 22 லட்சம் ரூபாய் இவருடைய பேக்கேஜ் என்பதும்தான் மிக முக்கியக் காரணங்கள்.

”திருத்தணிக்குப் பக்கத்துல இருக்குற நாராயணபுரம்தான் என் சொந்த ஊரு. எங்க வீட்ல நாங்க நாலு பொண்ணுங்க. நான் அதுல மூணாவது பொண்ணு. மூணாவதும் பொண்ணா பொறந்திடுச்சுனு ஊருக்குள்ள என் அம்மாவையும் அப்பாவையும் எல்லோரும் கேலி பண்ணியிருக்காங்க.

அதனால, எங்க தாத்தாவும் பாட்டியும், ‘இந்தப் பொண்ணுக்கு வேண்டாம்னு பேர் வைச்சுடுறா, அப்பதான் அடுத்து பிறக்கிறதாவது பையனா பொறக்கும்’ன்னு எங்கப்பாகிட்டே சொல்லியிருக்காங்க. அவரும் வேற வழி தெரியாம, அவங்க சொன்னபடியே எனக்கு பேர் வைச்சுட்டாரு. ஆனா, எனக்கடுத்து பொறந்ததும் தங்கச்சிதான்.

அக்காங்களுக்கு ஷன்மதி, யுவராணி, தங்கச்சிக்கு சரண்யான்னு அழகழகா பேர் வைச்ச என் அப்பா அம்மா, எனக்கு மட்டும் இப்படி பேர் வைச்சுட்டதால ஸ்கூல்ல, காலேஜ்ல, வெளியே போற வர்ற இடங்கள்னு எங்கபார்த்தாலும் என் பேராலேயே நிறைய கேலி, கிண்டலை சந்திருச்சிருக்கேன். சில நாள் ரொம்ப வருத்தமாயிடுச்சுனா,

அன்னிக்கு எங்கப்பாகிட்டே போயி சண்டைபோடுவேன். அவரும் ‘தப்புப் பண்ணிட்டேன்மா’ என்று கலங்குவார்” என்கிற வேண்டாமுக்கு, தன்னுடைய பெயர் விஷயத்தைத் தவிர, தன் அப்பாவைப் பற்றி பெருமிதப்பட்டுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

”நாங்க நாலு பேரும் சின்னப் புள்ளைங்களா இருக்கிறப்போ, எங்கப்பா தறி நெய்கிற வேலைதான் பார்த்துக்கிட்டிருந்தாரு. எங்களை வளர்க்கிறதுக்கு, படிக்கவைக்கிறதுக்கு அதுல வர்ற வருமானம் போதாம, விவசாயமும் செய்ய ஆரம்பிச்சாரு. எங்க நாலு பேரையும் நல்லா படிக்கவைச்சாரு. மூத்த அக்கா, இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிருக்காங்க.

ரெண்டாவது பி.எஸ்சி படிச்சுட்டு கவர்ன்மென்ட் வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கா. அடுத்து நானு, இன்ஜினீயரிங் படிச்சுக்கிட்டிருக்கேன். கடைசி தங்கையும் பி.எஸ்சி ஃபர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டிருக்கா.

ஊர்ல எல்லோரும் எங்கப்பாகிட்டே, ‘பொண்ணுங்களை எதுக்கு படிக்கவைக்கிறே, அதுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற வீட்டுக்குப் போயிட்டா அவங்களுக்குத்தானே சம்பாதிச்சுக் கொடுக்கும் அசோகன்னு’ கேட்கிறப்போ எல்லாம்,

எங்கம்மா கெளரி’அவங்க சொல்றதெல்லாம் நிஜந்தானே’ன்னு மனசு உடைஞ்சு அழுவாங்க. எங்கப்பா மட்டும் அதையெல்லாம் காதுலேயே வாங்கிட்டது இல்ல. கடன் வாங்கியாவது எங்க நாலு பேரையும் நல்லா படிக்க வைச்சுடணும்கிறதுல தீர்மானமா இருந்தாரு. இப்ப நீங்க என்கிட்டே பேட்டி எடுக்கிறதுக்குக் காரணம் எங்கப்பாதான் மேடம்” என்று குரல் தழுதழுக்கிற வேண்டாமிடம், ஜப்பான் கம்பெனியில் வேலை கிடைத்தது பற்றி கேட்டோம்.

”எங்க காலேஜில் ஃபாரின் லாங்வேஜஸ் சொல்லிக் கொடுக்கிறாங்க. அதுல எனக்கு ஜப்பான் மொழி மேலே இன்ட்ரஸ்ட் வந்து கத்துக்கிட்டேன். ஃபைனல் இயர் படிக்கிறப்போ, ஜப்பான்ல இருந்து டிரெய்னர்ஸ் வந்து, இன்னும் நல்லா கத்துக்கொடுத்தாங்க.

நானும் ஆர்வமா கத்துக்கிட்டேன். அதனாலதான் கேம்பஸ் இன்டர்வியூவில் செலெக்ட்டாக முடிஞ்சது. ‘ Human resocia’ ங்கிறது ஜப்பான்ல பெரிய கம்பெனி மேடம்” என்கிற அந்த இளம்பெண்ணின் குரலில் கோடி கோடி நம்பிக்கை நட்சத்திரங்கள்.

உங்களுக்கு ‘வேண்டாம்’ என்று பெயர் வைத்த தாத்தா, பாட்டி இப்போது என்ன சொல்கிறார்கள் என்றோம். ”பாட்டி ரொம்ப ஃபீல் பண்ணாங்க மேடம்
. ‘நான் தெரியாம அப்படி பேர் வைச்சுட்டேன்’னு சொல்லி என் கையைப் புடிச்சுக்கிட்டு அழுதாங்க” என்று சிலிர்ப்பாகப் பேசுகிற வேண்டாம், கூடிய சீக்கிரம் தன் பெயரை தனக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்ளப் போகிறாராம்.

-விகடன்-