சகோதரியின் திருமணத்திற்காக ஆசையாய் ஊருக்கு வந்த இளைஞர் : குடும்பத்துடன் மண்ணில் புதைந்த சோகம்!!

874

சகோதரியின் திருமணத்திற்காக..

சகோதரியின் திருமணத்திற்காக ஆசை ஆசையாய் ஊருக்கு வந்த இளைஞர் குடும்பத்துடன் மண்ணில் புதைந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு. இவர் தமது சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் திருமணம் என்பதால் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவே விஷ்ணு ஊருக்கு வந்துள்ளார்.

ஆனால் பேரிடர் விஷ்ணுவின் வீடு தேடி வரும் என்பதை அவர் கனவிலும் நினைக்கவில்லை. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கவளப்பாறை என்ற பகுதியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி பல குடும்பங்கள் மண்ணில் புதைந்த நிலையில், விஷ்ணுவின் குடும்பவும் அதில் சிக்கியுள்ளது.

திருமண ஏற்பாடுகளால் மகிழ்ச்சி பொங்கி காணப்பட்ட குடியிருப்பு தற்போது வெறும் மணற் மேடாக மட்டுமே காட்சி அளிக்கின்றது. மணப்பெண் ஜிஷ்னா இல்லை, அவரது சகோதரர் விஷ்ணு இல்லை, தந்தை விஜயன் இல்லை, தாயார் விஷ்வேசுவரி இல்லை.

நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையிலும், இதுவரை இந்த குடும்பத்தினரின் சடலங்களை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.

வியாழனன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இந்த குடும்பத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பியது விஷ்ணுவின் சகோதரன் ஜிஷ்ணு மட்டுமே என தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ராணுவ முகாமில் பணியாற்றும் விஷ்ணு கடந்த வாரமே ஊருக்கு திரும்பியுள்ளார்.

பேய் மழையில் சிக்கி மாநிலம் முழுவதும் தவிக்கும் நிலையில், பகல் மொத்தமும் நண்பர்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த விஷ்ணு, இரவு சாப்பிட குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். ஆனால் அதன் பின்னர் விஷ்ணுவை அவரது நண்பர்கள் இதுவரை கண்டதில்லை என கண்ணீர் பொங்க தெரிவித்துள்ளனர்.