பகலில் பள்ளிக்கூடம் : மாலையில் தொழிலதிபர் : அசத்தும் மாணவன்!!

529

அசத்தும் மாணவன்

பள்ளியில் படித்துக் கொண்டே சொந்தமாக தொழில் தொடங்கி கடந்தாண்டு ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டி சாதித்துள்ளார் 14 வயதான பொன் வெங்கடாஜலபதி.

திருப்பூரின் காங்கேயத்தை சேர்ந்த தம்பதி நாச்சிமுத்து- ஜெயலெட்சுமி, இவர்களது மகன் பொன் வெங்கடாஜலபதி, 14 வயதான இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பகலில் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்கும் வெங்கடாஜலபதி, மாலை வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய தொழிலை கவனிக்க சென்று விடுகிறார்.

வெறும் 10 கோழிக்குஞ்சில் தொடங்கிய தொழில், இன்று 150 கோழிகளுடன் வளர்ந்து நிற்கிறது, கடந்தாண்டு மட்டும் ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அம்மா- அப்பா இருவருமே வேலைக்கு செல்வதால் விடுமுறை நாட்களில் தாத்தா வீட்டில் தான் வளர்வேன், விவசாயம் செய்து கொண்டே கோழிப்பண்ணை வைத்திருக்கிறார் தாத்தா. அங்கிருக்கும் போது கோழிகளை பராமரித்ததில் எனக்கும் கோழிப்பண்ணை வைக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

இதை பெற்றோரிடம் கூறியதும் அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் ரூ.10,000 செலவில் வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். முதலில் தாத்தா, அப்பாவிடம் அறிவுரைகள் கேட்டுக் கொண்டு யூடியூப் பார்த்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்வேன்.

காலையில் 6 மணிக்கு எழுந்ததும் சுமார் ஒரு மணிநேரம் பண்ணையை பார்த்துக் கொண்ட பின்னர் பள்ளிக்கு கிளம்பி விடுவேன். மாலை வீடு திரும்பியதும் மீண்டும் பண்ணை வேலையை தொடர்வேன், தேர்வுகள் இருக்கும் சமயங்களில் அப்பா பார்த்துக் கொள்வார்.

தாய் கோழி ரூ.400க்கும், மாதத்திற்கு 20 கிலோ சிக்கனும் விற்பனை செய்வதால் நல்ல லாபம். தற்போது 2 ஆட்டுக்குட்டியும், 2 வாத்து வளர்த்து வருவதுடன் எதிர்காலத்தில் வேளாண்கல்வி கற்று ஒருங்கிணைந்த பண்ணை வைக்க வேண்டும் என்பதை தன்னுடைய ஆசை என நெகிழ்கிறார் வெங்கடாஜலபதி.