திருமணச் செய்தியை மறுத்த நடிகை : புதிய முடிவு!

99

நடிகை கௌசல்யா 90-களில் முன்னணி ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர். 38 வயதான அவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவல் வதந்தி என மறுத்தார் கௌசல்யா.

இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை எனவும் கூறியிருந்தார் கௌசல்யா. இந்நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘உத்ரா’ எனும் பக்தி படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார் கௌசல்யா.

கௌசல்யா ஏற்கெனவே, ‘ராஜகாளி அம்மன்’, ‘தாலி காத்த காளியம்மன்’ உள்ளிட்ட பக்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் கௌசல்யா ‘உத்ரா’ பக்தி படத்தில் நடிக்கிறார். ‘உச்சகட்டம்’, ‘நெல்லை சந்திப்பு’ ஆகிய படங்களை இயக்கிய நவீன் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

‘உத்ரா’ படத்தில் விஸ்வா, விவாந்த், ரக்ஷா, ரோஷினி, சினேகா நாயர் ஆகிய புதுமுகங்கள் நடித்திருக்கிறர்கள். ஆர்.கே.டிஜிட்டல் மீடியா சார்பில் ராஜ்குமார் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உத்ரா எனும் பெண்ணையும், அவளது காதலனையும் கொன்ற வில்லனை, உத்ரா ஆவியாக வந்து பலிவாங்குவது தான் கதை. இதற்கிடையே உத்ராவின் சாபத்தால் கிராமத்தில் நடக்கும் கொலைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கிறார்கள். இந்தக் கதையில் தான் அம்மனாக கௌசல்யா நடிக்கிறார்.