காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் : காரணம் தெரியுமா?

120

சேலம் மாநகர ஆணையாளரிடம் புதிதாக திருமணம் செய்த ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. சேலம் பெரிய சீரகாபடி, பொதிய தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். தறி தொழிலாளியான இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, அன்று வீட்டை விட்டு வெளியேறி இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்துள்ளனர். இந்த விவகாரம் திவ்யா வீட்டிற்கு தெரிந்ததும் கடும் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், திவ்யாவை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.

மேலும் 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்று கூறி நீதிமன்றத்தையும் நாடி சென்றனர். இந்நிலையில் திவ்யாவிற்கு 18 வயது பூர்த்தியடைந்ததையடுத்து கடந்த 14ம் தேதி திவ்யாவும் சதீஷ்குமாரும் மிண்டும் வீட்டை விட்டு வெளியேறி ஏற்காடு அடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்திற்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல் வேறு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.