கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிகப் பெரிய உயிரினம் : நிலநடுக்கத்திற்கான அறிகுறி என பீதி!!

1297

 

பிலிப்பைன்சில் அடையாளம் தெரியாத உயிரினம் ஒதுங்கியதால் நிலநடுக்கத்திற்கான அறிகுறியா என்று மக்கள் பீதியில் உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மண்டலத்தில் சன் ஆண்டோனியோ என்ற நகரம் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் வழக்கத்துக்கு மாறாக உயிரினம் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

க்ளோப்ஸ்டர் என்றழைக்கப்படும் அந்த உயிரினத்தை பார்ப்பதற்கு மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த உயிரினத்தின் அருகில் நின்று கொண்டு செல்பி எடுத்தும் கொள்கின்றனர்.

இது ஒருபுறம் இருப்பினும் க்ளோப்ஸ்டரை சாபமாக, கெட்ட விடயங்களின் அறிகுறியாக மக்கள் பார்க்கின்றனர். ஏனெனில் ஆழ்கடலில் இருந்து ஏதாவது ஓர் உயிரினம் கடற்கரைக்கு இறந்து வந்தால் அதன்பிறகு அங்கு நிலநடுக்கம் நிகழலாம் எனவும் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதன்காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இந்த நம்பிக்கை எல்லாம் ஜப்பானின் புராணங்களில் இருந்து வந்தவையாக இருக்கலாம் எனவும், இறந்த அரக்கன், கெட்டதை முன்கூட்டியே சொல்லும் சாபம் என்றெல்லாம் நம்பப்படும் க்ளோப்ஸ்டர் இதற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தினகட் தீவின் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

அதுவும் தற்போது ஒதுங்கியுள்ளது போன்றே இருந்துள்ளது. சுமார் 4000 பவுண்ட் எடையும் 20 அடி நீளமும் உடையது. க்ளோப்ஸ்டரில் காணப்படும் முடி போன்ற பகுதி, உயிரினத்தின் உடலில் இருக்கும் தசை நார்கள். அந்த உயிரினம் இறந்தபின் அவை சிதைந்து மக்கி முடிபோன்றவையாக உருபெறுகின்றன.

இதைக் கண்ட மீனவளத் துறை அதிகாரிகள், க்ளோப்ஸ்டரின் திசு மாதிரிகளை சேமித்துச் எடுத்துச் சென்றுள்ளனர். அதை வைத்து செய்யப்படும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் இது என்ன உயிரினம் என்பதை அடையாளம் காணலாம் எனவும், பரிசோதனைக்கு முன்பே இவை பெரும்பாலும் திமிங்கலங்களாகத்தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.