கொரோனாவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி : பிரித்தானிய ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!!

245

கொரோனாவை கட்டுப்படுத்த..

பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் விகிதம் ஒரு மாதத்துக்குள் 24 சதவீதம் குறையும் என்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நான்கு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உலக நாடுகளில் கடுமையாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் குறையும் என்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரித்தானியாவின் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மாதிரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜூலை 20ம் திகதி வரை 131 நாடுகளில் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும், அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து, இந்த மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இதுகுறித்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஷ் நாயர் கருத்து வெளியிடுகையில், கொரோனா பரவலை குறைக்க தனிப்பட்ட நடவடிக்கைகளாக பாடசாலைகள், பணியிடங்களை மூடுதல், பொது நிகழ்ச்சிகளை தடை செய்தல், 10 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளால், 28 நாட்களில் கொரோனா பரவல் விகிதம் 24 சதவீதம் குறையும். சில நாடுகளில் கொரோனா 2வது அலை பரவல் நடப்பதை பார்த்துள்ளோம்.

அதை தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்த வேண்டும். இதற்கு நல்ல பலன்கள் ஏற்படுவதை பார்த்துள்ளோம். பாடசாலைகளை திறந்ததால், சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

ஆகவே, பாடசாலைகளை திறக்கும்போது, கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.