ரூ.1,800 கோடி பிட்காயினில் சேமிப்பு; பாஸ்வேர்டை மறந்ததால் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத சோகம்!

118

பிட்காயின்…

பிட்காயின்: பலருக்கும் இது ஒரு புதிரான விஷயமாகவே உள்ளது. பணத்தைப் பார்ப்பதே அரிதான நமக்கெல்லாம் கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணமான பிட்காயினை வாங்குவதோ அல்லது முதலீடு செய்வது என்பதோ, அல்லது அதனை புரிந்து கொள்வதோ சற்று சிரமமான விஷயமாகவே இருக்கும்.

சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டும், சில நாடுகளில் அங்கீகாரம் இன்றியும் இருக்கும் பிட்காயினில் தொடக்கத்தில் முதலீடு செய்ய பலர் தயக்கம் காட்டினாலும் தற்போது பலரும் இதில் முதலீடு செய்ய ஆர்வமாகவே இருக்கின்றனர். காரணம் பல நூறு மடங்கு அதிகரித்திருக்கும் அதன் விலை. இன்றைய தேதியில் பிட்காயினின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதலீடு என்பது வளர்ந்து கொண்டே தான் செல்கிறது.

ஒடு பிட்காயினாவது வாங்கிவிட மாட்டோமா என ஏங்கி தவிப்பவர்களுக்கு 100 பிட்காயின்களின் விலை என்னவாக இருக்கும் என்பது இதன் மதிப்பு அறிந்தவர்களுக்கே வெளிச்சம்.

தொடக்கத்தில் முதலீடு செய்திருந்தால் மட்டுமே இந்த அளவிற்கு பிட்காயின்களை நம்மால் வாங்க முடியும், தற்போதைய சூழலில் காசு வைத்திருந்தாலும் கூட இவ்வளவு ஆயிரம் பிட்காயின்களை நம்மால் வாங்க முடியாது என கூறுகிறார்கள் இதனை பற்றி நன்கு அறிந்தவர்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரமல்ல 7,002 பிட்காயின்கள் வைத்திருக்கும் ஒருவரால் அதனை பணமாக மாற்ற முடியாமல் மொத்தத்தையும் இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிட்காயின்கள் அறிமுகமான ஆரம்பகட்டத்திலேயே 7,002 பிட்காயின்களை வாங்கிய Stefan Thomas என்பவர் அதனை பாதுகாப்பாக காக்கும் பொருட்டு என்கிரிப்ட் செய்யப்பட்ட அயர்ன் கீ எனப்படும் சிறிய ஹார்ட் டிரைவில் சேமித்து வைத்துள்ளார். இருப்பினும் அயர்ன் கீ ஹார்ட் டிரைவின் பாஸ்வோர்டை தாமஸ் மறந்துவிட்டார்.

இதனிடையே அந்த அயர்ன் கீ ஹார்வ் டிரைவின் சிறப்பம்சம் என்னவெனில் அதனுள் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மீட்டெடுக்க சரியான பாஸ்வோர்டை பதிவிட வேண்டும்.

அதிகபட்சமாக 10 முறை மட்டுமே சரியான பாஸ்வோர்டை உள்ளீட வாய்ப்பு கொடுக்கப்படும், அதற்கு மேலும் தவறான பாஸ்வோர்டை பதிவிட்டால் தகவல்களை எப்போதுமே மீட்டெடுக்க முடியாது. அந்த வகையில் தாமஸ் தற்போது 8 வாய்ப்புகளை வீணடித்து விட்டார். மேலும் இரண்டு வாய்ப்புகளையும் வீணடித்து விட்டால் மொத்த பிட்காயின்களையுமே அவர் இழக்க நேரிடும்.

அது சரி அந்த 7,002 பிட்காயின்களின் இன்றைய மதிப்பு என்னவென தெரியுமா?

அவற்றின் இன்றைய மதிப்பு 245 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது நம்மூர் மதிப்பில் சுமார் 1,800 கோடி ரூபாய் மட்டுமே!