ஆடு வளர்த்து லட்சங்களில் சம்பாதிக்கும் பேஷன் டிசைனிங் பெண் – அசத்தல் தொழிலதிபர் !

559

பேஷன் டிசைனிங் படிப்பில் பட்டம் பெற்ற பெண்ணொருவர் இன்று ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் பெயர் ஸ்வேதா.இன்றைய கார்ப்பரேட் உலகில் உயர் அதிகாரிகள் தரும் மன அழுத்தம் , உள் அரசியல் மற்றும் வேலைப்பளுவால் பாதிக்கப்பட்ட பலர் வேலையை துறந்து வெளியே வர்த்தகத்தில் கால் பதிக்கின்றனர்.

விவசாயம் போன்ற அனுபவமுள்ள தொழில்களிலும் படித்த இளைஞர்கள் புகுந்து கலக்குகின்றனர்.இது போன்ற வேலையா? சுய தன்மானமா என்கிற கேள்வி எழும்போதெல்லாம் பலரும் சரியான முடிவெடுக்க தயங்குவார்கள்.

ஆனால் ஸ்வேதா தனது தைரியமான முடிவினால் அனைவருக்கும் முன்மாதிரியாக இப்போது மாறியிருக்கிறார்.2015ல் ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகியிருக்கிறது. அதற்கு முன்பு வரை பேஷன் டிசைனிங்கில் சிறப்பாக பணிபுரிந்த ஸ்வேதாவிற்கு திருமணத்திற்கு பிறகு சொந்த தொழில் செய்யும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.

கணவருடன் ஒருமுறை ஆட்டுப் பண்ணை ஒன்றிற்கு சென்ற ஸ்வேதா ஆடுகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதன்பின் அடிக்கடி ஆட்டுப் பண்ணைக்கு சென்ற ஸ்வேதா ஆடு வளர்ப்பில் உள்ள சிரமங்கள் மற்றும் நன்மைகளை தெரிந்து கொண்டிருக்கிறார்.

இந்த ஆடு வளர்ப்பிற்கு நகரம் சரியான இடம் அல்ல என்பதை புரிந்து வைத்திருந்த ஸ்வேதா உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் அருகில் உள்ள ராணிபோக்ரி எனும் சிறு கிராமத்தை தனது சுயதொழிலுக்கான இடமாக தேர்ந்தெடுத்தார்.

தனது ஆடு வளர்ப்பு தொழிலுக்காக மொத்த சேமிப்பையும் முதலீடாக்கிய ஸ்வேதா அதனை விரிவுபடுத்த வங்கி கடனும் பெற்றுள்ளார்.

ஸ்வேதா தனது இந்த முடிவை பற்றி மற்றவர்களிடம் கூறிய போது பலரும் அதிர்ந்துள்ளனர். பேஷன் டிசைனிங் கிற்கும் ஆடு வளர்ப்பிக்கும் சம்பந்தமே இல்லை ஆகவே ஸ்வேதா பெரும் தவறை செய்வதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

ஸ்வேதாவோ மன திடத்தோடு இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அந்த கிராமத்தில் மற்ற விலங்குகள் நடவடிக்கை இருப்பினும் பயப்படாமல் 250ஆடுகளுடன் தனது பண்ணையைத் துவங்கி இருக்கிறார்

இவரது பண்ணையில் ஜம்னாபாரி , டோடோபாரி, சிரோக்கி பார்பாரி போன்ற நாட்டு வகையிலான ஆடுகள் மட்டுமே வளர்க்கப்படுகிறது.

ஆடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஊட்ட சத்து ஆகியவற்றை தானே நேரில் நின்று கவனித்து கொள்ளும் ஸ்வேதா ,சில சமயங்களில் ஆடுகள் விற்பனைக்கு அவரே சந்தைக்கும் செல்கிறார்.

அதுமட்டும் இன்றி இணையதளங்களிலும் ஆடுகள் விற்பனை செய்து வருகிறார்.

தொழில் ஆரம்பித்த முதல் வருடமே 25 லட்ச ருபாய் லாபமாக கிடைத்திருக்கிறது. இதனையடுத்து தொழிலை விரிவு படுத்தவும் இதுபற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஸ்வேதா திட்டமிட்டுள்ளார்.

மனதிற்கு பிடித்ததை செய்வது அனைவருக்குமே மன நிறைவை தருகிறது. கோடிகளில் சம்பாதித்து பிடிக்காத வேலையை செய்வதை விட லட்சங்கள் கிடைத்தாலும் பிடித்த வேலை செய்வது வாழ்வை அமைதியாக வாழ வைக்கிறது.

அதன்படி தான் படித்த பேஷன் டிசைனிங்கை விட தனக்கு பிடித்த ஆடு வளர்ப்பில் ஆரம்பத்திலேயே 25லட்ச ரூபாய் லாபம் கண்ட பெருமையையும் புகழையும் எட்டியிருக்கிறார் ஸ்வேதா.