தந்தையை ஈட்டியால் குத்தி கொலை செய்து நடகமாடிய மகன் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

222

தருமபுரி…

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து ஜருகு மந்திரிகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(48), இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். கோவிந்தசாமிக்கு மாதம்மாள் என்ற மனைவியும், 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதில் ஒரு மகன் மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள கோவிந்தசாமி அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வந்த கோவிந்தசாமி வீட்டின் அருகே உள்ள மூத்த மகன் நவீன் குமார் (28) வீட்டின் முன் நின்று கொண்டு கத்தியை வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் என் அருகே யாராவது வந்தால் குத்தி விடுவேன் என மிரட்டியும் உள்ளார். இதனால் கோபமடைந்த நவீன்குமார் அருகே இருந்த ஈட்டியை எடுத்து கோவிந்தசாமியின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார்.

இதனால் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்.

அப்போது தந்தை மதுபோதையில் தன்னைத் தானே குத்தி தற்கொலை செய்து கொண்டார் என நவீன்குமார் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, நவீன் குமாரை தொப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் நவின்குமார் கோபத்தில் தந்தையை ஈட்டியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தந்தையை கொலை செய்த மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து குடும்ப தகராறில் மகனே தந்தையை குத்தி கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்டதாக மகன் நம்ப வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.