புகையிரதம் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

435

சேலம்..

சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை நாமமலை காலனியை சேர்ந்த தறித்தொழிலாளி சதீஷ்குமாரை குண்டுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் சத்யா என்ப்வருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் சத்யா குடும்பம் நடத்த சிரமப்பட்டார். இதனால் அவர் சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் அம்மாபேட்டை மண்டலத்தில் கொசு ஒழிப்பு சுகாதார பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் சத்யாவுக்கும், மருந்து தெளிக்கும் பணியாளரான சாணிகுட்டை தெருவை சேர்ந்த விஷ்ணு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி சதீஷ்குமாருக்கு தெரியவந்ததும் மனைவியை அவர் கண்டித்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலன் விஷ்ணுவுடன் சத்யா வீட்டைவிட்டு வெளியேறி கோவைக்கு சென்று தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மனைவியை காணவில்லை என்று சதீஷ்குமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் சத்யாவின் தாய் கோவைக்கு சென்று மகளை சேலம் அழைத்து வந்தார். ஆனால் மனைவியுடன் வாழ மாட்டேன் என்று சதீஷ்குமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக சதீஷ்குமார் மகனை பார்ப்பதற்காக மாமனார் வீட்டுக்கு சென்று வந்தார்.

அப்போது கணவன், மனைவி இருவரும் சமாதானம் அடைந்து சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதனால் விஷ்ணுவிடம் தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சத்யா கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து விஷ்ணுவுக்கு வருகிற தை மாதத்துக்குள் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தினர் தீவிரமாக ஏற்பாடு செய்து வந்தனர்.

ஆனால் விஷ்ணு, சத்யாவுடனே வாழ விரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் சத்யாவிடம் தெரிவித்தார். கணவருடன் வாழ்வதா? அல்லது கள்ளக்காதலனுடன் வாழ்வதா? என பெரும் மனக்குழப்பத்தில் சத்யா இருந்துள்ளார். இதன் காரணமாக கள்ளக்காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 2.20 மணிக்கு பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் அருகே விஷ்ணு, சத்யா ஆகியோர் வந்தனர். அப்போது யஸ்வந்த்பூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16573) முன்பு அவர்கள் திடீரென்று பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபண்ணா, வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு வந்த விஷ்ணு மற்றும் சத்யாவின் உறவினர்கள், அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

அதைத்தொடர்ந்து விஷ்ணு, சத்யாவின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் ஜோடி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.