வித்தியாசமான சீர்வரிசை தட்டை தூக்கிவந்த நண்பர்கள் : நெகிழ்ந்துபோன மாப்பிள்ளை!!

319

விருதுநகர்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது எதிர்கோட்டை கிராமம். இங்கு வசித்துவரும் சுப்புராஜ் – முத்துலெட்சுமி தம்பதியின் மகனான நவநீதன் என்பவரின் திருமணத்தில் தான் இந்த வினோத சீர்வரிசை வைக்கப்பட்டிருக்கிறது.

தெர்மல் என்ஜீனியரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நவநீதன் என்பவருக்கும் இனாம் மீனாட்சிபுரத்தை சேர்த்த அனிதா என்பவருக்கும் நேற்று எதிர்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது, நவநீதனின் நண்பர்கள் கையில் சீர்வரிசை தட்டுகளுடன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். இதனை அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்க, சீர்வரிசையாக எடுத்துவரப்பட்ட புத்தகங்களை மணமகனுக்கு வழங்கி இருக்கின்றனர் நண்பர்கள்.

நவநீதன் – அனிதா திருமணத்தன்று மணமகனின் நண்பர்கள் சுமார் 25,000 மதிப்புள்ள 200 க்கும் மேற்பட்ட புத்தகங்களை பரிசாக வழங்கி இருக்கிறார்கள். இதற்காக சீர்வரிசை தட்டில் புத்தகங்களை ஏந்தியப்படி ஊர்வலமாக நவநீதனின் நண்பர்கள் வந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக, இந்திய மரபுப்படி மணமகள் வீட்டார் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மணமகனுக்கு சீர்வரிசையாக கொடுப்பார்கள். ஆனால், எதிர்கோட்டையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை சீர்வரிசையாக கொடுத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நம்முடைய மனதையும் எண்ணத்தையும் மாற்றியமைக்கக்கூடிய வல்லமை வாய்ந்த புத்தகங்களை பரிசுப் பொருளாக வழங்குவதன் மூலம் கற்ற, மேம்பட்ட சமுதாயத்தினை படைத்திட முடியும் என்கின்றனர் நவநீதன் – அனிதா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.

திருமணத்திற்கு புத்தகங்களை பரிசாக அளிக்கும் வழக்கம் சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. இவை பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை என்பதே பலரது கருத்தாகவும் இருக்கிறது.