8 வயதில் 300 மேடைகளில் சொற்பொழிவாற்றி பிரம்மிக்க வைக்கும் சிறுமி!!

93

தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், சுமார் 300 மேடைகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

காரைக்குடியைச் சேர்ந்த சிறுமி பூஜிதா(8). 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர், இந்த வயதிலேயே தமிழகத்தில் பல மேடைகளில் தனது பேச்சாற்றலால் அனைவரையும் ஆச்சரியபட வைத்துள்ளார்.

இவர் 1ஆம் வகுப்பு படிக்கும்போதே இவரது நினைவாற்றலைக் கண்டு வியந்த தனியார் பள்ளி ஒன்று, இவரைத் தத்தெடுத்துக்கொண்டது. அந்தப் பள்ளியில் பூஜிதா எந்தக் கட்டணமும் இன்றி 12ஆம் வகுப்பு வரை படிக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

LKG படிக்கும்போது முதன் முதலில் மேடையேறிய பூஜிதா, இதுவரை சுமார் 300 மேடைகளில் பேசியுள்ளார். அவற்றில் ஆன்மிக சொற்பொழிவு, இலக்கியக் கூடங்கள், முற்போக்கு மேடைகள் ஆகியவை அடங்கும்.

இவர் மைக்கைப் பிடித்து பேசினால், பார்ப்பவர்கள் மெய்மறந்து போவார்கள் என்று கூறுகிறார்கள். தனது பேச்சாற்றலினால் பூஜிதா 8 வயதிலேயே ‘இலக்கியச்செல்வி’, ‘முத்தமிழ்ச்செல்வி’, ‘தமிழமுது’, ‘மக்கள் பேச்சாளர்’ என பல பட்டங்களை பெற்றுள்ளார்.

பூஜிதாவின் தந்தை கணேஷ் தனது மகள் குறித்து கூறுகையில், ‘அப்போது பாப்பா பேச ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் எந்தப் பாட்டைக் கேட்டாலும், வசனத்தைக் கேட்டாலும் அப்படியே திருப்பி பாடுவாள், பேசுவாள்.

நமக்கு கூட சில நேரத்தில் வரிகள் மறந்துவிடும். ஆனால், அவள் வார்த்தைகள் மாறிடாமல் மிகச் சரியாக பேசுவாள். என் மனைவி இளவரசிதான் இதனை முதலில் கவனித்தார்கள். அதன்பின்னர், பூஜிதாவின் நினைவாற்றலை சரியாக பயன்படுத்த முடிவு செய்தோம்.

அவளுக்கு திருக்குறளை முதலில் சொல்லிக் கொடுத்தோம். தனது 3வது வயதில் மேடையில் திருக்குறளை ஒப்புவித்தாள். அதன்பின் திருப்பாவை, அபிராமி அந்தாதி சொல்லி கொடுத்தோம். பெரிய பிள்ளைகள் கலந்துகொண்ட மேடையில் 20 பாடல்களை சரியாக கூறி முதல் பரிசு பெற்றாள்.

ஆன்மீகம் மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றியும், சமூகப் பிரச்சனைகள் குறித்தும் பல மேடைகளில் பேசியிருக்கிறாள். மாறுவேடப்போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறாள்.

என் மனைவியுடன் இணைந்து யோகா, தியானம் எல்லாம் செய்வாள். வீட்டில் சுட்டிவிகடன், சிறுவர் மலர் போன்ற புத்தகங்களை படிப்பாள். பூஜிதாவின் பிறந்தநாளுக்கு பிறகு அவளது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், பூஜிதா கூறுகையில் ‘என் அப்பா, அம்மா தான் எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்தார்கள். எனக்கு பேசுவது ரொம்ப பிடிக்கும். என்ன சொல்லிக் கொடுத்தாலும் அப்படியே கேட்டுவிட்டு பேசிவிடுவேன்.

எனக்கு அப்துல்கலாமை ரொம்ப பிடிக்கும். பெரிய Scientist ஆக வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம்’ என தனது மழலைக் குரலில் தெரிவித்துள்ளார்.