இளம் பெண்ணை அடித்தே கொலை செய்த சகோதரிகள்!!

1035

சென்னை பெசன்ட் நகரில் வளர்ப்பு நாய் இறந்ததற்கு வீட்டின் பணிப்பெண்தான் காரணம் என்ற ஆத்திரத்தில் பணிப்பெண்ணை தாக்கி, சுடு தண்ணீர் ஊற்றி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய தொழிலதிபர் மனைவியும் அவரது உறவுப்பெண்ணும் கைதுச்செய்யப்பட்டனர்.

பெசன்ட் நகர், பெசன்ட் அவென்யூ சாலையில் வசிப்பவர் முருகானந்தம்(50). இவர் காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த மகாலட்சுமி(19) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக இருந்து வந்துள்ளார்.

நேற்று முன் தினம் மகாலட்சுமி திடீரென இறந்துவிட்டதாக மருத்துவமனைக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாரிடம் மகாலட்சுமி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.அப்போது மகாலட்சுமியின் உடல் முழுதும் தாக்கப்பட்ட ரத்தக்காயங்கள் மற்றும் தீயால் பாதிக்கப்பட்ட கொப்பளங்கள் இருந்துள்ளன.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகாலட்சுமியின் மரணத்தை சந்தேக வழக்காகவும் பதிவு செய்தனர்.பணிப்பெண் மகாலட்சுமியின் உடலில் எப்படி இத்தனை காயங்கள் வந்தது, உடல் முழுதும் தீக்காயம் எப்படி வந்தது என போலீஸார் தொழிலதிபர் முருகானந்தனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

முதலில் தற்கொலை, எனக்கு தெரியாது என மறுத்த முருகானந்தம், அவரது மனைவி, சகோதரி ஆகியோர் போலீஸாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.இவ்வளவு காயம் எப்படி உடலில் எப்படி வந்தது, எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தீர்கள், உடல் நிலை இவ்வளவு மோசமாக இருந்த நிலையில் மகாலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படாமல் வீட்டிலேயே உயிரிழந்தது எப்படி என போலீஸார் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர்.

அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் போலீஸாரை திடுக்கிட வைத்தது. முருகானந்தம் மற்றும் அவரது மனைவி சுஷ்மிதா பிரியா(36) வெளிநாட்டிலிருந்து நாய் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.

அந்த நாய் சமீபத்தில் இறந்துள்ளது. அதை மகாலட்சுமி அடித்துக்கொன்றதாக தெரிய வந்ததால் ஆத்திரமடைந்த சுஷ்மிதா, மகாலட்சுமியை கடுமையாக தாக்கியுள்ளார். இடையில் சுஷ்மிதாவின் தங்கை மித்ராக்‌ஷி(32) என்பவர் வெளியூரில் இருந்து வந்துள்ளார்.

அவரும் சேர்ந்து பணிப்பெண் மகாலட்சுமியை தாக்கியுள்ளார். கண்காணிப்பு கேமராவை அணைத்து வைத்துவிட்டு தோசைக்கரண்டியால் கடுமையாக தாக்கியுள்ளனர். முருகானந்தம் காஞ்சிபுரத்திலேயே தங்கி இருந்ததால் அவருக்கு இந்த விபரம் தெரியவில்லை. வீட்டுக்குள் மகாலட்சுமியை அடைத்து வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

சுஷ்மிதாவின் தங்கை மித்ராக்‌ஷி கொதிக்க கொதிக்க வெந்நீரை மகாலட்சுமியின் கைக்கால்களில் ஊற்றியுள்ளார்.இதனால் உடல் வெந்து கொப்பளம் ஆகி மகாலட்சுமி துடித்ததாகவும், மகாலட்சுமியை மருத்துவமனைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மகாலட்சுமிக்கு கடுமையான தாக்குதல் காரணமாக வலிப்பு வந்துள்ளது. அப்போதுதான் அவர்கள் தனது கணவர் முருகானந்தத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மகாலட்சுமி உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மகாலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் உண்மை தெரிந்துவிடும் எனக்கருதி, முருகானந்த பிரபல மருத்துவமனையில் தகவல் தெரிவித்து செவிலியரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.காலில் வெந்நீரைக் கொட்டிவிட்டார் என அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

செவிலியர் இரண்டு நாள் பார்த்துவிட்டு காயத்துக்கு மருந்து கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் கடுமையான உடல் நல பாதிப்பு காரணமாக மகாலட்சுமி 4-ம் தேதி இரவு உயிரிழந்தார்.மகாலட்சுமி இறந்த விபரத்தை தனது கணவர் முருகானந்தத்திடம் சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.

அவர் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னரே போலீஸார் வந்து உடலை கைப்பற்றியுள்ளனர்.மேற்கண்ட தகவலை மூவரும் வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பணிப்பெண் மகாலட்சுமியை தாக்கி கொலை செய்த விவகாரத்தில் முருகானந்தத்தின் மனைவி சுஷ்மிதா பிரியா, அவரது தங்கை மித்ராக்‌ஷி இருவரையும் கைது செய்தனர்.