ரூ. 30 கோடி ஸ்காலர்ஷிப்.. 18 வயது மாணவனுக்கு வலைவீசும் உலகின் 27 மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் : யார் இவர்?

642

அமெரிக்கா…..

அமெரிக்காவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு உலகின் மிகப்பெரிய 27 கல்வி நிறுவனங்கள் அழைப்பு விடுத்து உள்ளன.

பொதுவாக பள்ளி படிப்பினை முடித்துவிட்டு கல்லூரியை தேர்ந்தெடுக்கும் பருவத்தில் பலரும் தாங்கள் எதிர்பார்க்கும் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்குமா? என கவலையில் இருப்பது உண்டு. ஆனால், அமெரிகாவை சேர்ந்த ஒரு மாணவனுக்கு அந்த கவலை கிடையாது.

ஏனென்றால் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் பல அந்த மாணவனை சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் 30 கோடி ரூபாய் வரையில் ஸ்காலர்ஷிப் கொடுக்கவும் இந்த கல்வி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

பனாமா நகரில் உள்ள ரூதர்ஃபோர்ட் சீனியர் உயர்நிலை பள்ளியை சேர்ந்தவர் ஜொனாதன் வாக்கர். இவருடைய வயது 18. இவர் தற்போது தனக்கு அழைப்பு விடுத்திருக்கும் 27 கல்லூரிகளில் எந்த கல்லூரியில் படிக்க விரும்புகிறார் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த லிஸ்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களும் உள்ளன.

வாக்கர் தனது பள்ளி பருவத்திலேயே சர்வதேச இளங்கலை திட்டத்தின் மூலம், கல்லூரிகளில் பெறவேண்டிய பாடத் திட்டங்களை படித்திருக்கிறார். மேலும், கண்பார்வை குறைபாடு உடையோர் மற்றும் காது கேளாதோருக்கான உதவும் கருவியை கண்டிபிடித்திருக்கிறார் வாக்கர்.

படிப்பு மட்டும் அல்லாது கால்பந்து விளையாட்டிலும் இவர் சிறந்து விளங்குகிறார். பள்ளிகளில் கொடுக்கப்பட்ட ப்ராஜெக்ட்கள் மூலமாக, கல்லூரிகளில் இருக்கும் பாடத் திட்டங்களை இவர் பள்ளியிலேயே கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவரது பன்முக திறமையின் காரணமாக இவருக்கு சீட் வழங்க முன்னணி கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஓகே சொல்லியுள்ளன.

அதுமட்டும் அல்லாமல் இவருக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய்) கல்வி உதவித் தொகை வழங்கவும் கல்வி நிறுவனங்கள் தயாராய் இருக்கின்றன.

இதுகுறித்து வாக்கர் பேசுகையில்,” இத்தனை கல்லூரிகளுக்கு நான் விண்ணப்பித்திருந்தேன் என்பதை நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. ஆனால் எனக்கு இடம் கிடைத்திருக்கிறது. இது அரிய நிகழ்வு. உற்சாகமாக உணர்கிறேன்” என்றார்.

ஒவ்வொரு கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போதும் அந்த கல்வி நிலையத்தின் சிறப்புகளை பட்டியலிட்டு விரிவான கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளார் வாக்கர். அமெரிக்காவை சேர்ந்த மாணவர் வாக்கருக்கு 27 கல்லூரிகள் ஸ்காலர்ஷிப்புடன் சீட் கொடுக்க முன்வந்திருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.