150 ரூபாயில் தொடங்கி இன்று ரூ.3700 கோடியில் நிறுவனம்: சாதனை தமிழரின் கதை

236

மருத்துவ துறையில் Thyrocare நிறுவனம் என்றால் இன்று பல நாடுகளில் பிரபலம். இந்த நிறுவனம் நோய் தடுப்பு மற்றும் சுகாதார சோதனை ஆய்வகங்களை (Diagnostic And Preventive Care Laboratories) கொண்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1150 Thyrocare நிறுவனத்தின் மையங்கள் அமைந்துள்ளன.இந்த மையத்தில் முக்கியமாக தைராய்டு சோதனைகள், மனித ரத்த மாதிரிகள் சோதனை உள்ளிட்ட 200 மேற்பட்ட சோதனைகள் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.வேலுமணி ஆவார்.தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் கடந்த 1959ல் வேலுமணி பிறந்தார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த வேலுமணி தமிழ் வழி கல்வியில் தான் படித்தார்.

கடந்த 1978ல் பட்டப்படிப்பை முடித்த வேலுமணிக்கு போதிய பணி அனுபவமும், ஆங்கில பயிற்சியும் இல்லாத காரணத்தால் பல நிறுவனங்கள் வேலை தராமல் புறக்கணித்தது.பின்னர், ரூ.150 சம்பளத்தில் வேலுமணிக்கு மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளில் மூடப்பட கையில் இருந்த 400 ரூபாய் பணத்துடன் அவர் மும்பைக்கு சென்றார்.பின்னர், அங்குள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராக வேலுமணி வேலைக்கு சேர்ந்தார்.அங்கு பணிபுரிந்து கொண்டே முதுகலை பட்டத்தையும், டாக்டர் பட்டத்தையும் முடித்தார்.

இன்று இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்றால் எனது ஏழ்மையும், எளிமையும் தான் காரணம் – வேலுமணிபின்னர் நல்ல சம்பளம், வேலை என இருந்தாலும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வேலுமணிக்கு தோன்றியது.

இதையடுத்து 14 ஆண்டுகள் அணு ஆராய்ச்சி மையத்தில் பார்த்த வேலையை ராஜினாமா செய்த அவர், தான் சேமித்து வைத்த 2 லட்ச ரூபாய் பணத்தை வைத்து கடந்த 1995ல் Thyrocare நிறுவனத்தை தொடங்கினார்.

பின்னர், தான் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து தைராய்டு சோதனைகளை வேலுமணி செய்ய தொடங்கினார்.Thyrocare நிறுவனத்தின் போட்டி நிறுவனத்தை விட குறைந்த விலையில் மக்களுக்கு சோதனைகளை செய்ய ஆரம்பித்தார்.

பின்னர் வளர்சிதை மாற்றம் (Metabolism), நாளமில்லா சுரப்பி (endocrine) சோதனைகள் போன்ற குறிப்பிட்ட துறையில் அதிக கவனத்தை செலுத்தினார்.பின்னர், மெல்ல மெல்ல வளர்ந்த அவரின் மருத்துவ நிறுவனம் நல்ல லாபத்தை கொடுக்க ஆரம்பித்தது.இன்று, Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடியாகும்.

லாபத்துக்காக மட்டும் வேலை செய்யக்கூடாது, நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தவும் வேலை செய்தால் தான் லாபம் மற்றும் நிறுவன மதிப்பு என இரண்டும் உயரும் – வேலுமணிஇன்று வேலுமணி தனது போட்டி நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.