தினமும் பப்பாளிப் பழத்தை சாப்பிடுங்கள் : கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

931

பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சீரண மண்டலம் ஆரோக்கியம் பெறுவதுடன் பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும்.

பப்பாளி பழம் நீண்ட நாட்கள் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. மேலும், பப்பாளி பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

அழகு : உடலுக்கு ஆரோக்கியம் தரும் பப்பாளி பழம் சருமத்திற்கும், வடிவத்திற்கும் உதவுகிறது. அத்துடன் அழகை மெருகேற்றுவதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் : பப்பாளி பழத்தில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

மேலும், பப்பாளியில் உள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, பொட்டசியம், கால்சியம், வைட்டமின் சி, பி, ஏ, மக்னீசியம், என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள் போன்ற ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளன.

உடல் எடை குறைதல் : பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடை குறையும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி : பப்பாளி நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள வைட்டமின் சி, ப்ளோனாய்டுகள், ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் கரோட்டீனாய்டுகள் ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுபெற செய்யும்.

கண்களின் ஆரோக்கியம் : பப்பாளி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண்ணுக்கு தேவையான ஆரோக்கியத்திற்கு வெகுவாக உதவுகிறது. இது மக்குலார் டிஜெனரேஷன் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படாமல் தடுக்கிறது.

எலும்பு வலிமை : பப்பாளியை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்புகள் வலிமை பெறும். எலும்புகளில் அழற்சி பண்பை போக்க பப்பாளி உதவுகிறது. மேலும், பப்பாளியில் உள்ள வைட்டமின் சி ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சீரண சக்தி : பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்ற என்சைம், சீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே இந்த பழத்தை தினசரி டயட்டில் சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.